அயோத்தி ராமர் கோயில் ஒவ்வொரு இந்தியரின் கனவு - எல்.முருகன்

அயோத்தி ராமர் கோயில் ஒவ்வொரு இந்தியரின் கனவு - லட்சியம் என்று மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். அயோத்தி ராமர் கோயிலால் இந்தியாவின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார்.

Feb 10, 2024 - 17:49
Feb 10, 2024 - 18:07
அயோத்தி ராமர் கோயில் ஒவ்வொரு இந்தியரின் கனவு - எல்.முருகன்

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் குறித்தான விவாதத்திற்காக இன்று ஒருநாள் (பிப்.10) நீட்டிக்கப்பட்டது. மாநிலங்களவையில் இதுதொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஜனநாயகத்துக்கு வழிகாட்டியாக இருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி என பெருமிதம் தெரிவித்தார். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவு - லட்சியம் எனவும்,  தமிழ்நாடு வழக்கறிஞர் மோகன் பராசரன் 92 வயதில் சட்ட வடிவில் அயோத்தி கோயிலுக்காக போராடினார் எனவும் எல்.முருகன் கூறினார்.

இரண்டே ஆண்டுகளில் ராமர்கோயில் பிரதமர் மோடியால் கட்டப்பட்டுள்ளது எனக்கூறிய அவர், ராமர் கோயிலுக்காக உயிர்தியாகம் செய்தவர்களை நினைவுகூர்வோம் எனவும் தெரிவித்தார். தமிழ்நாடு ஒரு ஆன்மீக பூமி எனவும், தமிழ் உலகத்துக்கே உதாரணமான மொழி எனவும் அவர் கூறினார். 

தமிழ்நாட்டுக்கும் அயோத்திக்கும் இடையிலான தொடர்பை வலிமைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கத்தை 2 முறை பிரதமர் நடத்தியதாக எல்.முருகன் மாநிலங்களவையில் தெரிவித்தார். ராமர் கோயில் திறப்புக்காக 11 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி கடும் விரதமிருந்ததாக கூறிய எல்.முருகன், 3 விரத நாட்களை தமிழ்நாட்டில் கழித்து புனித நீராடியவர் பிரதமர் எனக் கூறினார். 

கன்னியாகுமரியைச் சேர்ந்த மர சிற்பக் கலைஞர் ரமேஷ் தலைமையில் 50 கலைஞர்கள் அயோத்தியின் 54 பிரமாண்ட கதவுகளை செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். தனது சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்டமும் ராமாயணத்துடன் தொடர்புடையது எனக்கூறிய அவர், அங்கிருந்து 48 ஆலய மணிகள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும் மாநிலங்களவையில் பெருமிதமாக உரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow