கவுதமியின் நில மோசடி புகார்.. பைனான்சியர் அழகப்பன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து
தனது நிலங்களை மோசடி செய்ததாக நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பைனான்சியர் அழகப்பன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜகவில் இருந்தபோது நடிகை கவுதமி சினிமா பைனான்ஸ்சியர் அழகப்பனுடன் இணைந்து, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் மற்றும் சென்னை நீலாங்கரையில் சொத்து என நடிகை கௌதமிக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
இந்த சொத்துகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் காரைக்குடி சி.அழகப்பன், அவருடைய மனைவி நாச்சாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, உறவினர் பாஸ்கர் மற்றும் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகியோர் மீது நடிகை கௌதமி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அழகப்பனை கைது செய்தனர்.
இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான அழகப்பன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதனையடுத்து அழகப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை எதிர்த்து, அறிவுரை கழகம் நீதிபதிகளிடம் முறையிட்டதன் அடிப்படையில், அழகப்பன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய நடிகை கவுதமி, தற்போது அதிமுகவில் இணைந்து, அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?