டவருக்கு கீழ் கிடந்த காவலாளி உடல்.. BSNL அலுவலகத்தில் மர்மம் காம்பர்மைஸ் பண்ணிய போலீஸ்
உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்வதை தடுத்து தங்களுக்கு நீதி வேண்டும் என உறவினர்கள் போராட தொடங்கினர்.
திருப்பத்தூர் மாவட்ட BSNL அலுவலகத்தில் பணிபுரிந்த காவலர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்வதை தடுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் கௌதம் பேட்டை பகுதியிலுள்ள BSNL தொலைத் தொடர்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், BSNL அலுவலகத்தின் கட்டிடத்தில் உள்ள டவரில் ஏறி பழுது பார்த்தபோது எர்த் அடித்து, அவர் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை மீட்ட சக ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் சிவக்குமார் உடலை கட்டியணைத்து கதறி அழுதனர்.
அத்துடன் சிவகுமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீர் முற்றுகையிலும் ஈடுபட்டனர். அதோடு உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்வதையும் தடுத்து தங்களுக்கு நீதி வேண்டும் என போராட தொடங்கினர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களை சமரசம் செய்து உரிய விசாரணை செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்துச்சென்றனர். அதன்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
What's Your Reaction?