திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த அஜீத் குமார்.. சுப்ரபாத தரிசனம்..உற்சாகத்தில் தல ரசிகர்கள்
பிரபல நடிகர் அஜித் இன்று திருப்பதி கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.
திருப்பதி: சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வந்த அவர் திருப்பதி மலையில் இரவு தங்கி இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.சாமி கும்பிட்ட பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.
அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கிய விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 % படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் திடீரென இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்ற உண்மையான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.
அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்சமயம் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருக்கின்றது. படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட அஜித் விடாமுயற்சி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு ஜூன் மாதம் 20 ஆம் தேதி துவங்கவுள்ளதாம். மீண்டும் அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும், அஜித் விரைவில் அர்பைஜானுக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் அஜித் இன்று திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். தான் நடித்து வரும் திரைப்படங்களின் சூட்டிங் தொடங்கும் போதோ அல்லது முடியும் போதோ அஜீத் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபடுவார். விவேகம் திரைப்படத்தின் சூட்டிங் முடிந்த போதும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார் அஜீத். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பல தடைகளை தாண்டி துவங்கியிருப்பதால் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் அஜித்.
விடாமுயற்சி திரைப்படம் சூட்டிங் வெற்றிகரமாக முடிந்து திரைக்கு வந்து வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான் அஜித் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் என சொல்லப்படுகின்றது. எனவே விடாமுயற்சி திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி துவங்கும் நிலையில் கண்டிப்பாக இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரசிகர் ஒருவர் ஏழுமலையானின் சிறிய சிலையை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரசிகர்கள் அனைவருடனும் புன்னகை மாறாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அஜீத்.
What's Your Reaction?