Azhagi: ரீ-ரிலீஸுக்கு ரெடியான பார்த்திபனின் அழகி… இதுல இவ்ளோ ஸ்பெஷல் இருக்குதா..?

பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம். ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ரீ-ரிலீஸுக்கு ரெடியாகியுள்ளது.

Mar 16, 2024 - 13:13
Azhagi: ரீ-ரிலீஸுக்கு ரெடியான பார்த்திபனின் அழகி… இதுல இவ்ளோ ஸ்பெஷல் இருக்குதா..?

தமிழ் திரையுலகில் அழகி மிக முக்கியமான படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. உதயகீதா சினி கிரியேஷன்ஸ் உதயகுமார் தயாரிப்பில் தங்கர்பச்சான் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியான அழகி, திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் அழகி படத்துக்கு முக்கியமான இடம் உண்டு.    

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக கோலோச்சிய தங்கர் பச்சான் முதல் முறையாக எழுதி இயக்கிய திரைப்படம் அழகி. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளிவந்தது. தங்கர் பச்சான் தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கல்வெட்டு என்ற சிறுகதையை எழுதியிருந்தார். அதனை தழுவி அழகி படத்தை இயக்கியிருந்தார். அதேபோல் இப்படத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.    

முதல் காதல் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷலானது, அது சாகும் வரையிலும் மனதோடு ஒட்டியிருக்கும். பள்ளி காலத்தின் முதல் காதல் வாழ்வில் எப்போதும் உடன் வரும். அப்படியான முதல் காதலியை ஒருவன் சந்திக்க நேரிட்டால் என்னவாகும் என்பது தான் இப்படத்தின் கதை. எல்லோரின் பள்ளிக்கால நினைவுகளை கிளறிவிட்ட இப்படம், அனைவரின் முதல் காதலையும் மனதுக்குள் ரிங்காரமிட வைத்தது.    

வெற்றிப் பெறாத முதல் காதல் நினைவுகளை, மூன்று பருவங்களை தாண்டிச் செல்லும் ஒரு மனிதனின் உள் உணர்வுகளை அதுவரை தமிழ் சினிமா காட்சிப்படுத்தாத வகையில் மிக இயல்பாக இப்படத்தில் காட்டியிருந்தார் தங்கர்பச்சான். தமிழ் சினிமாவின் எந்த இலக்கணங்களுக்குள்ளும் சிக்காத இப்படம், பொன்னால் பொறிக்கப்பட்ட காதல் காவியமாக அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது.  

அஜித் நடித்த ரெட், கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படங்களோடு வெளியான அழகி, அவைகளை ஓரம் கட்டிவிட்டு குக்கிராமங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் வரையும் சென்று ப்ளாக்பஸ்டர் வெற்றிப் பெற்றது. பள்ளிக்கால நிறைவேறா காதல்  இக்கால தலைமுறையினரும் எளிதில் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியது. அதிகமாக காதல் திரைப்படங்கள் வராத தற்போதைய தமிழ் சினிமாவில், வேற்றுமொழி காதல் படங்கள் கூட இங்கு மிகப்பெரிய வெற்றிப் பெற்று வருகிறது. இந்நிலையில் அழகி திரைப்படம் மார்ச் 29ம் தேதி 4K, 5:1 தொழில்நுட்பத்துடன் ரீ-ரிலீஸாகவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow