அமலாக்கத்துறை வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால்..
சொந்த செலவில் ரூ.15,000-க்கு ஜாமீன் மற்றும் ரூ.1 லட்சம் உத்தரவாதம் வழங்க ஆணை
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு ஆஜராகாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. தொடர்ந்து 8 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அனைத்தையும் நிராகரித்த கெஜ்ரிவால், மார்ச் 4-ம் தேதி ஆஜராக கோரிய சம்மனையும் நிராகரித்தார். மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு காணொலியில் விசாரணைக்கு ஆஜராகத் தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் ஆஜராகாதது குறித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது.
நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி,புதிய மனு மீதான விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு சொந்த ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சொந்த செலவில் ரூ.15,000-க்கு ஜாமீன் பத்திரம் வழங்கவும், ரூ.1 லட்சத்துக்கான உத்தரவாதம் வழங்கவும் ஆணையிட்டுள்ளது.
What's Your Reaction?