CSK-வின் புதிய HEAD COACH நியமனம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sep 21, 2026 - 20:17
CSK-வின் புதிய HEAD COACH நியமனம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!
CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானைத் தங்களது புதிய தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசன் முதல் அவர் இந்தப் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராகக் கடந்த 16 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் பிளமிங், கடைசி மூன்று சீசன்களாக அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதிபெறாததைத் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி அல்லது தோனியின் பரிந்துரையின் பேரில் ஹேமாங் பதானி பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடியுள்ள ஜாகீர் கான், 2011 உலகக்கோப்பை வெற்றியில் முக்கியப் பங்காற்றியவர். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள இவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சிக் குழுவில் இருந்தபோது 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை வென்றது. பின்னர் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் மென்டராகப் பணியாற்றி 2025-இல் விலகினார்.

ஜாகீர் கானின் நியமனம் குறித்துப் பேசிய சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத், அவரது விளையாட்டு அனுபவமும் இளம் வீரர்களை வழிநடத்தும் திறனும் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் எனத் தெரிவித்தார். நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதன், கிரிக்கெட் விளையாட்டை நுணுக்கமாகப் புரிந்து வைத்திருக்கும் ஜாகீர் கானை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.

புதிய பொறுப்பு குறித்துப் பேசிய ஜாகீர் கான், "ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான சிஎஸ்கே அணியுடன் இணைவது பெருமையளிக்கிறது; சேப்பாக்கம் மைதான ரசிகர்களின் சூழலில் இந்த பாரம்பரியமிக்க அணியுடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow