யஷ் எனும் ராவணன்... கிராபிக்ஸ் எனும் பிரம்மாண்டம்... ஆனாலும் ஏமாற்றம்!

ராவணனாக யஷ் மிரட்டும் நிலையில், பிரம்மாண்டமான கிராபிக்ஸ் மற்றும் காட்சிகள் கவனம் ஈர்த்தாலும், உணர்ச்சியற்ற திரைக்கதையும் நீண்ட காட்சிகளும் ராமாயணத்தைச் சராசரி படமாக மாற்றுகின்றன.

Nov 5, 2026 - 17:33
யஷ் எனும் ராவணன்... கிராபிக்ஸ் எனும் பிரம்மாண்டம்... ஆனாலும் ஏமாற்றம்!

ராமாயணம் என்றாலே நம் எல்லோருக்கும் கதை தெரியும். ராமர், சீதை, லட்சுமணன், ராவணன் எனக் கதாபாத்திரங்களும் தெரியும். ஆனால், தெரிந்த கதையை மீண்டும் சொல்லும்போது அதில் எவ்வளவு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறோம் என்பதில்தான் ஒரு படத்தின் வெற்றி இருக்கிறது. அந்த இடத்தில்தான் இயக்குநர் சற்றுத் தடுமாறியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

ராமாயணத்தைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் திரைக்குக் கொண்டுவரும் முயற்சியில் காட்சிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, உணர்வுகளுக்கும் கொடுத்திருந்தால் படம் வேறொரு உயரத்தைத் தொட்டிருக்கும்.

ராவணனாக யஷ்... அசத்தல்!

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் யஷ். ராவணனாக அவர் திரையில் தோன்றும் காட்சிகள் ஒவ்வொன்றும் தனி கவனம் பெறுகின்றன. குறிப்பாக, அவருக்கான காட்சிகள் கம்பீரமாகவும் பிரமாண்டமாகவும் அமைந்துள்ளன. ராவணனின் கதாபாத்திரத்திற்கு யஷ் கொடுத்திருக்கும் உடல்மொழியும் திரை ஆளுமையும் படத்திற்குப் பெரிய பலம்.

அதேபோல், ஜடாயு தொடர்பான கிளைமாக்ஸ் காட்சி 'வாவ்' சொல்ல வைக்கிறது. அந்த அளவுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பிரமிக்க வைக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாகப் பல இடங்களில் படம் சர்வதேசத் தரத்திலான பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துகிறது.

ராமர் - சீதை காதலில் மிஸ்ஸிங் எமோஷன்!

ராமர் - சீதை தொடர்பான காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு மனதில் பதியவில்லை. குறிப்பாக, அந்தக் கதாபாத்திரங்களுக்கிடையிலான உணர்வுப்பூர்வமான தருணங்கள் பார்வையாளர்களுடன் சரியாக இணைக்கத் தவறுகின்றன. லட்சுமணன் கதாபாத்திரம் ஓரளவுக்குக் கவனம் ஈர்க்கிறது.

பிரம்மாண்டம் இருக்கு... ஆனா இசை?

படத்தின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று இசை. இவ்வளவு முக்கியமான இதிகாசக் கதையில் இசை ஏற்படுத்த வேண்டிய உணர்வும் பிரம்மாண்டமும் பல இடங்களில் மிஸ்ஸிங். காட்சிகள் பிரமாண்டமாக விரிந்தாலும், அவற்றுக்கு உயிரூட்ட வேண்டிய பின்னணி இசை ஏமாற்றமளிக்கிறது.

எல்லாவற்றையும் விட, ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த கதையை மீண்டும் சொல்லும்போது திரைக்கதையில் கூடுதல் சுவாரஸ்யம் தேவை. ஆனால், நீண்ட காட்சிகளும் மெதுவாக நகரும் கதையோட்டமும் பல இடங்களில் பொறுமையைச் சோதிக்கின்றன.

கோடிக்கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்கிவிட்டால் மட்டும் போதுமா? பார்வையாளர்களின் மனதையும் தொட வேண்டாமா? என்பதுதான் படம் முடிந்ததும் எழும் கேள்வி.

மொத்தத்தில், பிரம்மாண்டமான மேக்கிங், அசத்தலான கிராபிக்ஸ், ராவணனாக யஷ் எனப் பல பிளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும், உணர்வற்ற திரைக்கதையும் சுவாரஸ்யமில்லாத நீளமும் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. கண்களுக்கு விருந்து... ஆனால் மனதுக்கு? ஷப்பாபாபா….

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow