ஆளப் போறான் தமிழன்.. 500 விக்கெட்டுகளை சாய்த்த அஸ்வின்..! ராஜ்கோட் டெஸ்ட்டில் அசத்தல்..!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டவாது இந்தியர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மட்டுமே 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்தியர் என்ற சிறப்பை பெற்றிருந்தார். 97 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அஸ்வின், 23,92 சராசரியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சிறப்பையும் அஸ்வின் பெற்றுள்ளார்.
அதிவேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே இந்திய வீரர் அஸ்வின் தான். உலகளவில் டெஸ்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முரளிதரன், வார்ன், கும்ப்ளே, லயன் ஆகியோருடன் ஐந்தாவது வீரராக அஸ்வின் இணைந்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் வரிசையில் நேதன் லயனுக்கு அடுத்தபடியாக 9வது இடத்தில் உள்ளார். அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 37 வயதான அஸ்வின், பந்துவீச்சு மட்டுமின்றி ஐந்து சதங்களுடன் 3271 ரன்கள் எடுத்து ஆல்ரவுண்டராகவும் முத்திரை பதித்துள்ளார்.
500 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வினுக்கு கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட அணி வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் அஸ்வினை வாழ்த்தி வருகின்றனர்.
What's Your Reaction?