பீகாரில் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை... வெளியான வீடியோவால் பரபரப்பு!

பீகாரில் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Sep 21, 2026 - 18:14
பீகாரில் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை... வெளியான வீடியோவால் பரபரப்பு!

பீகாரின் ஜமுய் நகரில், பயிற்சி வகுப்பிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய 10-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் மற்றும் மாணவியை ஒரு கும்பல் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவலான கண்டனங்களைப் பெற்று வருகிறது.

சம்பவத்தன்று அம்மாணவர்கள் இருவரும் ஜமுய் நகரில் உள்ள பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு மாலை நேரத்தில் தங்களது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைச் சூழ்ந்துகொண்ட நபர்கள் சிலர், வாகனத்தை நிறுத்தித் தகாத வார்த்தைகளால் பேசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மாணவனின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தாக்கியதோடு, மாணவியிடம் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். மாணவி அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு, "தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள், இனி இங்கு வரமாட்டோம்" எனக் கெஞ்சிய போதிலும், அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களை அச்சுறுத்தி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இச்சம்பவத்தை அக்கும்பலில் இருந்த ஒருவர் தனது தொலைபேசியில் வீடியோ படம்பிடித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறை இச்சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட இரு மாணவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தித் தகவல்களைச் சேகரித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை உள்ளூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோவில் இடம்பெற்றுள்ள மற்ற நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பீகாரின் ஜமுய் பகுதியில் இருந்து வெளியாகியுள்ள வீடியோ மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி மாணவர்கள் இருவர் வழிமறிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய செயல்களில் ஈடுபட இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? வீடியோவில் உள்ள ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு போக்சோ சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் குற்றவாளிகளைக் உடனடியாகக் கைது செய்யத் தவறியதாகக் கூறி, பீகாரில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையும் அவர் விமர்சித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow