"பஸ் டே" கொண்டாட சென்ற மாணவர்கள்... நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்ட கல்லூரி முதல்வர்

கல்லூரி நுழைவாயில் அருகே "பச்சையப்பாஸ்க்கு ஜே" என கோசமிட்டபடி போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். பிறகு போலீசார் மாணவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தனர்.

Jun 19, 2024 - 16:38
"பஸ் டே" கொண்டாட சென்ற மாணவர்கள்... நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்ட கல்லூரி முதல்வர்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதற்காக சென்றபோது, கல்லூரி முதல்வர் நுழைவு வாயிலில் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி கல்லூரிக்குள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றனர். 

ஆனால் 10 மணிக்கு மேல் வரும் மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிப்பதில்லை என்பதால் மாலை போட வந்த மாணவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி முதல்வரே நுழைவுவாயிலில் பூட்டை போட்டு விட்டு சென்று விட்டார். இதையடுத்து மாணவர்கள் கோஷம் எழுப்பி விட்டு சென்றனர். 

மேலும், பிராட்வே ரூட்டைச் சேர்ந்த மாணவர்கள் தடம் 15 எண் கொண்ட பிராட்வேயில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற பேருந்தில், சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் பேனர் மற்றும் மாலை ஆகியவற்றை வைத்துக்கொண்டு பச்சையப்பர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 

மேலும், கல்லூரி நுழைவாயில் அருகே "பச்சையப்பாஸ்க்கு ஜே" என கோசமிட்டபடி போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். பிறகு போலீசார் மாணவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தனர். 

இதே போல, சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் கூட்டமாக வந்தனர். அப்போது பிராட்வே நோக்கி சென்ற மாநகர பேருந்தில், படிகட்டில் தொங்கியபடி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தி விட்டார்.

அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் கல்லூரி மாணவர்களை கண்டித்தனர். படிக்கட்டில் தொங்கி பயணம் செய்யக்கூடாது என்று கண்டித்தனர். ஆனாலும் மாணவர்கள் கேட்கவில்லை. இதனால் போலீசார் மாணவர்களை பேருந்தில் ஏற்றி விட்டு அதே பேருந்தில் போலீசாரும் பயணித்து மாணவர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைபோல, சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகில் இன்று காலை மாநில கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடினர். பஸ் டே கொண்டாடுவதற்காக ஒன்று கூடியது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து அங்கு சென்ற போது கல்லூரி மாணவர்கள் சிதறி ஓடினர்.

உடனே போலீசார் 4 மாணவர்களை மடக்கி பிடித்தனர். சோதனை செய்ததில் அவர்களிடம் 4 கத்திகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தியதில், 4 பேரும் மாநில கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருவது தெரிய வந்தது. இவர்களிடம் கத்தியை கொடுத்து விட்டு தப்பி ஓடிய மேலும் 3 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் முக்கிய சாலைகள் கல்லூரி மாணவர்களால் பரபரப்புடன் காணப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow