சுகாதாரமற்ற குடிநீரால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பலி
சுகாதாரமற்ற குடிநீரை அருந்தியன் காரணமாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மோகித் குமார் வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் வேதனை கொள்ளச் செய்திருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரமூர்த்திபட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - ரம்யா தம்பதியரின் 10 வயது மகன் மோகித் குமார். தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த எட்டு நாட்களாக சிறுவன் மோகித் குமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் உயிரிழந்தார்.
இதனை வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் உடல் சங்கரமூர்த்தி பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் தங்கள் கிராமத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் பைப் சாக்கடை நீர் செல்லும் வாய்க்காலில் பதிக்கப்பட்டுள்ளதால் பல நேரங்களில் சாக்கடை நீர் கலந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி ஐந்து சிறுவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏற்கனவே 22 சிறுவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல்நலம் பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கி வரும் நிலையில் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்பொழுது ஒரு சிறுவன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டுவதோடு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் டெங்கு காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பதை மருத்துவர் தெரிவிக்காத நிலையில் உயிர் இழப்புக்கு காரணம் என்ன என்பதனையும் சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை கொடுத்துள்ளனர்.
What's Your Reaction?