Cyclone Arnab: ஆக்ரோஷமாக கரையைக் கடக்கும் அர்னாப் புயல்.. சூறைக்காற்றுடன் கொட்டும் கனமழை!

அர்னாப் புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Oct 28, 2026 - 08:09
Cyclone Arnab: ஆக்ரோஷமாக கரையைக் கடக்கும் அர்னாப் புயல்.. சூறைக்காற்றுடன் கொட்டும் கனமழை!
Cyclone Arnab

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ‘அர்னாப்’ புயல் தொடர் நகர்வுகளுக்குப் பிறகு தற்போது கரையைக் கடந்து வருகிறது. 

கடந்த சில நாட்களாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த அர்னாப் புயல், படிப்படியாக வலுப்பெற்று மிக தீவிரப் புயலாக மாறியது. கடந்த சில மணி நேரங்களாக மணிக்கு சுமார் 22 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த இந்த மிகக் கடுமையான சூறாவளிப் புயல், மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திரக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மையம் கொண்டிருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அர்னாப் புயலின் முன்பகுதி மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடற்கரை இடையே (பாபட்லா - விசாகப்பட்டினம் பகுதிக்கு அருகில்) கரையைக் கடக்கத் தொடங்கியது.

தற்போது புயலின் கண் பகுதி எனப்படும் மையப்பகுதி முழுமையாகக் கரையைக் கடந்துள்ளதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் நிகழ்வின்போது ஆந்திரா, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

தற்போதைய நிலவரப்படி, அடுத்த 1 முதல் 2 மணி நேரத்தில் புயலின் பின்பகுதியும் முழுமையாகக் கரையைக்கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, நிலப்பகுதியை அடைந்ததும் புயலின் தீவிரம் குறையத் தொடங்கி, அடுத்த 4 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், 12 மணி நேரத்தில் புயலாகவும் படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow