திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...

Apr 1, 2024 - 18:22
திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அவரை அதிகாரிகள் கைது செய்தனர். சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு சிட்டிங் CM கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து முதலில் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28-ம் தேதி வரையும், பின்னர் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் இன்றுடன் (01-04-2024) காவல் முடிவடைந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில், "விசாரணையின் போது கெஜ்ரிவால் கேள்விகளுக்கு மழுப்பான பதில்களைக் கூறினார். அவரது மின்னணு சாதனங்களின் கடவுச் சொற்களை தர மறுக்கிறார். ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தவறான ஆதாரங்களை வழங்கி குழப்பினார்" என தெரிவிக்கப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில், "உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருந்துகளையும், சில சிறப்பு உணவுகளையும் வழங்க வேண்டும். ராமாயணம், ஸ்ரீமத் பகவதம் மற்றும் நீரா செளத்ரி எழுதிய ஹவ் தி பிரைம் மினிஸ்டர்ஸ் டிசைட் (How The Prime Ministers Decide) ஆகிய புத்தகங்களையும் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து கெஜ்ரிவாலை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow