ஏழரை சனி அகற்றப்பட வேண்டும்...திமுகவை கடுமையாக சாடிய இபிஎஸ்!
விவசாயம் என்பது புனிதமான தொழில், என்னை பற்றி பேசுவதாக நினைத்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுகிறார் ஸ்டாலின் - இபிஎஸ்
திமுக என்ற ஏழரை சனி, வரும் மக்களவைத் தேர்தலோடு அகற்றப்பட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக சார்பில், ஜீ.வி கஜேந்திரனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். எப்போது திமுகவினர் ஆட்சிக்கு வந்தார்களோ, தமிழ்நாட்டிற்கு ஏழரை சனி பிடித்துவிட்டதாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி. கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? அவர்கள் குடும்பத்தை தாண்டி வேற யாராலும் தலைமை பதவிக்கு வரமுடியாதா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதிமுகவில் அப்படி கிடையாது, நான் தொண்டனாக இருந்து பொதுச்செயலாளர் ஆனவன் என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, பச்சைத்துண்டு போடும் பழனிசாமி, பச்சை பொய் பேசுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அவர், விவசாயி ஒருவன் தான் எதற்கும் பயப்படாமல் உண்மையை சொல்பவன் என்றும், விவசாயம் என்பது புனிதமான தொழில், என்னை பற்றி பேசுவதாக நினைத்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுகிறார் ஸ்டாலின் எனக் கூறினார்.
மேலும், ஒரு செங்கலை எங்கு சென்றாலும் உதயநிதி தூக்கி கொண்டு செல்வதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி , இந்த கல்லால் விளம்பரம் மட்டும் தான் செய்கிறார் என்றும் அதனை நாடாளுமன்றத்தில் காட்டி இருந்தாலாவது எய்ம்ஸ் இந்நேரத்திற்கு கிடைத்திருக்கும் எனவும் விமர்சித்தார். இறுதியாக, என்னத்தான் உருண்டு புரண்டாலும் திமுகவால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார் .
What's Your Reaction?