“கருத்தை சொல்ல அவருக்கு உரிமை உள்ளது” - விஜய்க்கு செல்வப்பெருந்தகை சப்போர்ட்
விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், இயக்க ஆரம்பிக்கலாம். அவரது கருத்தை சொல்லலாம்.
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை மணிப்பூரில் கலவரம் இருக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நாகர்கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை உற்று நோக்க பார்க்க வைத்த இரும்பு பெண்மணி மாபெரும் தலைவர், இந்திய தேசத்தை தலைநிமிர செய்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழாவை குமரி மாவட்டத்தில் கொண்டாடுவதில் பெருமையாக கருதுகிறோம்.
பயங்கரவாதத்தை ஒழிக்க அரும்பாடுபட்டவர் இந்திரா காந்தி.எனவே பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளோம். குமரி மாவட்டம் காங்கிரஸின் இதயமாக உள்ளது. ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி ஆகும். 2004 முதல் 2014 வரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம். இது காங்கிரஸ் ஃபார்முலா. கிராம கமிட்டி அமைப்பதற்காக அந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். அதுதான் தலையாய கடமையாக பணி செய்து வருகிறோம்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், இயக்க ஆரம்பிக்கலாம். அவரது கருத்தை சொல்லலாம். பாஜக ஆட்சியில் இருக்கும் வரை மணிப்பூரில் கலவரம் இருந்து கொண்டு தான் இருக்கும். எல்லா மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதாவும் அமைதியை சீர்குலைத்து வருகிறது. பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார் ஏன் மணிப்பூருக்கு மட்டும் செல்லவில்லை.இது மர்மமாக உள்ளது” என தெரிவித்தார்.
What's Your Reaction?