போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க வேண்டும்! தமிழ்நாடு ஆளுநர் கோரிக்கை
போதை பழக்கங்களில் அடுத்த தலைமுறை சிக்கிவிடக் கூடாது
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நேரத்தில், போதை பழக்கங்களில் அடுத்த தலைமுறை சிக்கிவிடக் கூடாது என்று தமிழ்நாடு ஆளுநர் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது தள பதிவில் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அண்மையில் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மாநில குற்றப்பிரிவினர் மூலம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்கள் மற்றும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் பற்றிய பயங்கர செய்திகளால் தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ள அதிர்ச்சியூட்டும் தகவலை உறுதி செய்தியுள்ளது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகில் இத்தகைய போதைப் பொருள்கள் புழங்கி வருவதாகவும் தகவல் வருவதால், அடுத்த தலைமுறையை இவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடமையை நாம் உணர வேண்டும். மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்கள், நாட்டுக்கு பயங்கர கேடு விளைவிப்பவை ஆகும். கவனமாக இல்லாவிட்டால் வருங்கால தலைமுறையை தனக்கு அடிமையாக்கி, அதன் மூலம் மோசமான குற்றச் சம்பவங்களில் ஈடுபட வைக்கும் அளவு இத்தகைய போதைப்பொருட்கள் கொடுமையானவை.
குறிப்பாக, இளைஞர்களை இந்த போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குறிவைக்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், கல்வி நிலையங்களின் நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் தங்கள் பகுதிகளில் ஏதேனும் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளை உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனத்துடன் இருந்து, அவர்கள் போதைப் பழக்கத்தில் ஆட்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் எக்காரணத்தைக் கொண்டும் போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. மக்கள் மற்றும் மாநிலத்தின் நலன் கருதி அனைவரும் இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?