உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு... பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பிசிசிஐ திட்டம்!

டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று நள்ளிரவு இந்தியா வர உள்ளனர். பார்படாஸில் இருந்து மும்பை விமான நிலையம் வரும் இந்திய வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Jul 1, 2024 - 06:54
Jul 1, 2024 - 06:56
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு... பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பிசிசிஐ திட்டம்!
பிசிசிஐ

மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 176/7 ரன்கள் குவித்தது.

பின்பு பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கபில்தேவ், தோனி வரிசையில் ரோகித் சர்மாவும் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரிடம் தனித்தனியாக போனில் பேசிய பிரதமர் மோடி அவர்களின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் பகிர்ந்தும் கோலாகலமாக கொண்டாடினார்கள். இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா எக்ஸ் தளத்தில், ''டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி அளப்பரிய திறமை, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியது. அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று நள்ளிரவு இந்தியா வர உள்ளனர். பார்படாஸில் இருந்து மும்பை விமான நிலையம் வரும் இந்திய வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

விமான நிலையத்தில் இருந்து இந்திய அணி வீரர்களை திறந்தவெளி வாகனங்களில் ரசிகர்கள் மத்தியில் அழைத்துச் செல்ல பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow