ஆலையை மூடாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்... ஈரோட்டில் கருப்புக் கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு

Apr 10, 2024 - 06:59
ஆலையை மூடாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்... ஈரோட்டில் கருப்புக் கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் எண்ணெய் ஆலையின் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்கள், தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளதால் கவனம் பெற்றிருக்கிறது.

ஈரோட்டை அடுத்துள்ள மூலக்கரை கிராமத்தில் பிரபல தனியார் ஆயில் தயாரிப்பு ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும், அப்பகுதியை சுற்றியுள்ள கூறப்பாளையம், கதிரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், விவசாய நிலங்கள் ஆயில் கழிவுகளால் பாதிக்கப்படுவதாக மக்கள் குமறுகின்றனர். இதனைத் தொடர்ந்து நிலத்தடி நீர், கிணறு, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளும் மாசடைந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசுடைவது மட்டுமின்றி, பல்வேறு நோய் தொற்றுக்கு அப்பகுதி மக்கள் ஆளாவதாக கூறி வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், தனியார் ஆயில் மில்லை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், இல்லையெனில் தேர்தல் தொடர்பாக எந்த அரசியல் கட்சியனரும் எங்கள் பகுதிக்கு வர வேண்டாம் என்றும்  பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow