பச்சை துண்டு எடப்பாடிக்கு விவசாயம் தெரியாது- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

”பச்சை துண்டு விவசாயி தான் பழனிசாமி. அவருக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. தோளில் கலப்பையைக் கொண்டு செல்வார். எந்த நிலத்தில் இறங்கி உழுதார் என்பதே அவருக்கே தெரியாது” என எடப்பாடி பழனிச்சாமியே விமர்ச்சித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.

பச்சை துண்டு எடப்பாடிக்கு விவசாயம் தெரியாது- அமைச்சர் ரகுபதி விமர்சனம்
minister raghupathy criticizes edappadi palaniswami

புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்' நடைபெற்றது. இக்கூட்டத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பழைய பல்லவிகளைத் தவிர புதிய பல்லவிகள் எதுவும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். ”எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது புதுக்கோட்டையில் காவிரி குண்டாறு திட்டத்தைத் தொடங்கினேன் என்று பேசுகிறார். இத்திட்டத்திற்கு அவர்கள் ஒதுக்கிய தொகை 
சுமார் 700 கோடி. இதில் என்ன செய்ய முடியும் என்றும்” அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

”முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கரூர் மாயனூர் அருகில் தடுப்பணை கட்டி, அதன் மூலம் வாய்க்கால் வழியாக புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு சென்றால் பொருளாதாரம் மேம்படும். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பதை உணர்ந்து செயல்பட்ட கலைஞர் ஒரு விவசாயி” என குறிப்பிட்டார்.

"பச்சை துண்டு விவசாயி தான் பழனிசாமி. அவருக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. தோளில் கலப்பையைக் கொண்டு செல்வார். எந்த நிலத்தில் இறங்கி உழுதார் என்பதே அவருக்கே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு விவசாயி, இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை தந்து விட்டேன், அதை முடக்கி விட்டார்கள் என்று சொல்கிறார்," என்று எடப்பாடி பழனிசாமியின் விவசாயப் பின்னணியைக் கிண்டல் செய்தார்.

”கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால்தான் எடப்பாடி பழனிசாமி அதை கிடப்பில் போட்டுவிட்டு புதிய திட்டத்தை கொண்டு வந்தார் என்றும், நிலமெடுப்பு செய்யும் போது ஏற்பட்ட பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு போன்ற காரணங்களால்தான் அவர் கொண்டு வந்த திட்டம் தாமதமடைந்து வருகிறது” என்றும் அமைச்சர் ரகுபதி விளக்கினார்.

"எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டத்தில் கோளாறு உள்ளது. அதை சரி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதை நீதிமன்றம் மூலமாக சரி செய்து கொண்டிருக்கிற காரணத்தினால் தான் திட்டம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது, பணமும் விரயமாகி கொண்டிருக்கிறது. விவசாயிகள் மீது அக்கறை உள்ள அரசு திமுக. வெற்று விளம்பரத்திற்காக ஆட்சி நடத்துகிற அரசு திமுக கிடையாது," என்று அமைச்சர் கூறினார்.

விராலிமலை தொகுதியை வெல்லும் நிலை திமுகவுக்கு உள்ளது என்றும், அங்கு விஜயபாஸ்கருக்கும் வேறு யாருக்கும் இடமில்லை என்றும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow