சூடு பிடிக்கும் தேர்தல் களம் : காங்கிரசு-திமுக நாளை அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழு தலைவர் கிரிஷ் ஜோடங்கர், முதல்வர் ஸ்டாலினை நாளை சந்தித்து பேச உள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், திரைமறைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை தங்கள் பக்கம் இழுக்க தவெக தீவிரம் காட்டி வருகிறது.
தவெக-காங்கிரஸ் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும். ராகுல்காந்தி தூதர் விஜயை பனையூரில் நேரில் சந்தித்த தகவல்கள் எல்லாம் வெளியாகின. இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை டெல்லி காங்கிரசு அமைத்தது.
கிரிஷ் ஜோடங்கர், செல்வபெருந்தகை அடங்கிய ஐவர் குழுவினர் நாளை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின் போது காங்கிரசு 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் 40 தொகுதிகளுக்கான பட்டியலை வழங்கும் என தெரிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கிரிஷ் ஜோடங்கரிடம், ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூனாகார்கே ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த ஆலோசனையில் திமுக தலைமையை சங்கடப்படுத்தும்படி தொகுதி பேச்சுவார்த்தைகள் இருக்க வேண்டாம் என்றும், இந்தியா கூட்டணியில் இருக்கும் முக்கிய பலமான சக்தி திமுக என்பதால் அவர்களிடம் இணக்கமாக பேச்சுவார்த்தையை நடத்துமாறும் கிரிஷ் ஜோடங்கருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிஷ் ஜோடங்கர் தலைமையிலான குழு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கடந்த வாரம் ஆலோசனை மேற்கொண்டு இருந்தது. அப்போது குறைந்தபட்சம் 50 தொகுதிகளை திமுகவிடம் இருந்து கேட்டு பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 125 தொகுதிகள் கண்டறியப்பட்டு, அதில் இருந்து இந்த 50 தொகுதிகளை கேட்டுபெற வேண்டும். இல்லையென்றால் குறைந்த பட்சம் 40 தொகுதிகளுக்கு கீழ் குறையாக கூடாது என இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கிரிஷ் ஜோடங்கரிடம் வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கும் தொகுதிகள் உள்பட 40 தொகுதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலை நாளை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கிரிஷ் ஜோடங்கர் குழுவினர் வழங்கவுள்ளதாக கதர் சட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

