கரூர் சம்பவம் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்:விசாரணையை தொடங்கிய சிபிஐ

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று இரண்டாவது முறையாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். இந்நிலையில் சிபிஐ கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கி, பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. 

கரூர் சம்பவம் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்:விசாரணையை தொடங்கிய சிபிஐ
கரூர் சம்பவம் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் நீதிபதி அஜய் ரத்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த 12-ம் தேதி விஜய் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அன்று சுமார் 7 மணி நேரம் அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். வழக்கறிஞர்கள் மூலம் பதிலளிக்க அனுமதி கோரியும், சி.பி.ஐ. அதிகாரிகள் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் விஜய் டெல்லி சென்றார்.

கடந்த முறை அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், ஜனவரி 19-ம் தேதி (இன்று) மீண்டும் ஆஜராகுமாறு விஜய்க்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய தினமே டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் விஜய் தங்கினார். அதன்படி, இன்று காலை 10.15 மணியளவில் அவர் டெல்லி லோதி ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வந்தார்.

கடந்த முறை அவர் அளித்த பதில்களில் உள்ள விவரங்களை உறுதிப்படுத்தவும், அதில் உள்ள சந்தேகங்களை நீக்கவும் இம்முறை அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow