கடைசி வாய்ப்பு மிஸ்ஸி பண்ணிடாதீங்க, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஜனவரி 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் (SSR) தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளின்போது பெறப்பட்ட விண்ணப்பங்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல், 2025 டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அதில் பெயர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பான கோரிக்கைகள் (ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள்) 19.12.2025 முதல் 18.01.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு முதன்மைச் செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் ஜனவரி 6-ம் தேதி அறிவித்திருந்தார்.
அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ள குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள், படிவம்-6 ஐ உறுதிமொழிப் படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்துத் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய வாக்காளர் சேர்க்கை, முகவரி மாற்றம், பெயர் நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகக் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் (ஜனவரி 18) முடிவடைந்தது. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 13.03 லட்சம் பேரும், பெயர் நீக்கம் செய்யக் கோரி 35,646 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், இதற்கு மேல் கால நீட்டிப்பு செய்யப்பட வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
What's Your Reaction?

