சட்டம்- ஒழுங்கு சவால்... ரத்து செய்யப்பட்ட அரசாணைகள்.. 6 மாதங்களை நிறைவு செய்த தவெக அரசு!
ஆறு மாதங்களை நிறைவு செய்யும் தவெக அரசு, பல மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும் சட்டம்-ஒழுங்கு மற்றும் அரசாணை ரத்து விவகாரங்களில் விமர்சனங்களைச் சந்திக்கிறது.
தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகளுக்கு மாற்றாகப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகம் அரசு, இன்றுடன் (நவ.10) தனது 6 மாத ஆட்சிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு, பல்வேறு புதிய நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ள அதே வேளையில், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களையும் நிர்வாகச் சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது.
செயல்படுத்தியுள்ள திட்டங்கள்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்.
வெற்றிப் பயணம் திட்டம்: ஒரு பெண் அல்லது திருநர் 80 கிலோமீட்டர் தூரம் வரை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 அல்லது அதற்குள் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுத் தொகையும் தள்ளுபடி செய்யப்படும்.
200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம்: இரு மாதங்களுக்கு ஒருமுறை (Bimonthly) கணக்கிடப்படும் மின் நுகர்வில் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு மட்டுமே இது பொருந்தும்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு பிரத்யேக அனைத்து மகளிர் காவல் படை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.
டாஸ்மாக் கடைகள் மூடல்: கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
சட்டம் - ஒழுங்கு & சிறைத்துறை நிர்வாக சீர்கேடு
தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டுகள் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக தீபாவளி பண்டிகை அன்று தமிழ்நாட்டில் மொத்தம் 11 கொலைகள் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சிறுவர்கள் காணாமல் போன சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செஞ்சி சிறுமி காணாமல் சென்று ஏறக்குறைய 1 மாத காலம் ஆனா நிலையில் இன்று வரை சிபிசிஐடி-க்கு துப்பு துளங்காமல் திணறி வருகின்றது.
போதாக்குறைக்கு, தேனி மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதிகள் 17 பேர் காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் தவெக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஊழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி சென்றனர். இந்த சம்பவங்கள் சிரைத்துறையில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
திரும்ப பெறப்பட்ட அரசாணைகள்
தவெக அரசு அமைந்து இந்த 6 மாதங்களில் அரசாணைகள் திரும்ப சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்றதும், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் ஜோதிடருமான ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தனிப்பட்ட நண்பர்களுக்கு அரசுப் பதவி வழங்குவதா என்ற விமர்சனங்கள் எழுந்ததால் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து (RTI) சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு அளிக்கும் அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ரத்து செய்தது.
நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்த்து இடதுசாரி மாணவர் இயக்கங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கக் கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு, அரசியல் மற்றும் மாணவர் அமைப்பிலிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலையில் மெல்மா தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்த தவெக அரசு எடுத்த முடிவு, விவசாயிகளின் கடும் போராட்டத்துக்கு இடையே திரும்பப் பெறப்பட்டது.
அதேபோல், 12 மாநகராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து, திருக்கோயில்களில் கைப்பேசிகளைக் கொண்டு செல்ல பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்பி பெறப்பட்டது போன்ற சம்பவங்கள் தவெக அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு
தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே மின்வெட்டு ஏற்படுவதுதான். இது ஒருபுறம் இருக்க, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மக்களை கவலையடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் அரிசி விலை சுமார் 30% அளவுக்கு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் போன்ற முக்கியப் பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விலை அதிகரித்துள்ளது.
What's Your Reaction?