திருமண விழாவில் துப்பாக்கியுடன் நடனமாடிய எம்எல்ஏ உதவியாளர்: போலீசார் தீவிர விசாரணை
கர்நாடகாவில் திருமண விழா ஒன்றில் துப்பாக்கியுடன் காங்கிரஸ் எம்எல்ஏ உதவியாளர் நடனம் ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநில கல்புர்கி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எம்.ஒய்.பாட்டீல். இவரின் நெருங்கிய உதவியாளர் மதீன் படேல். இந்த மதீன் படேல் துப்பாக்கியை ஏந்தியபடி திருமணக் கொண்டாட்டம் ஒன்றில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோ தொடர்பாக அவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அரசியல் ரீதியாக காங்கிரஸ் மீது பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதீன் படேல், ”என் சகோதரி மகளின் திருமண நிகழ்ச்சியில், எனது குடும்ப உறுப்பினர்கள் ’துரந்தர்’ படத்தில் வருவது போன்று செய்யச் சொன்னார்கள்.
அதற்காக அவர்கள், பொம்மை துப்பாக்கியையும் கொடுத்தார்கள். அதைவைத்தே, நான் நடனம் ஆடினேன். இதுகுறித்து காவல் துறையும் விசாரித்தனர். நான் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என சரிபார்த்து அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கல்புர்கி காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ”அந்த வைரலான காணொளியை காவல் துறையினர் கவனத்தில் கொண்டு சரிபார்ப்பு செயல்முறையைத் தொடங்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பாக, பரப்பப்படும் ரீலில் எந்த மாதிரியான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது, எந்தச் சூழலில் அந்தக் காணொளி உருவாக்கப்பட்டது என்பதையும் விரிவாக சரிபார்க்க உள்ளூர் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறினார்.
What's Your Reaction?

