சட்டவிரோத கட்டுமானத்தால் மேற்குவங்கத்தில் இடிந்த கட்டிடம் - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
மேற்குவங்கத்தில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், சிக்கியுள்ள பலரை மீட்கும் பணியை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கொல்கத்தாவின் கார்டன் ரீச்சில் உள்ள ஹசாரி மொல்லா பாகனில் 5 மாடிக் கட்டிடம் நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. தொடர்ந்து இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து, 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், 2 பெண்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்பதால், போலீசார் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மீட்புப் பணிகள் தரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறினார். விபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கான அனுமதியை மாநில அரசு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். கட்டிட விபத்துக்கு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார். கட்டிடத்துக்கு அருகே இருந்த ஒரு சில குடியிருப்புகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கும் உரிய நிவாரணம் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
What's Your Reaction?