நெருங்கும் தேர்தல்... NCP சின்னத்தை கைப்பற்றிய சூட்டோடு உச்சநீதிமன்றத்தில் கேவியட்மனு தாக்கல் செய்த அஜித்பவார் !

அஜித்பவார் அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Feb 7, 2024 - 14:25
நெருங்கும் தேர்தல்... NCP சின்னத்தை கைப்பற்றிய சூட்டோடு உச்சநீதிமன்றத்தில் கேவியட்மனு தாக்கல் செய்த அஜித்பவார் !

மகாராஷ்டிராவில் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமை வகித்து வந்த சிவசேனா கட்சியில் இருந்து விலகி பாஜக கூட்டணியுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். தொடர்ந்து சிவசேனா கட்சியின் சின்னத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றினார். இதேபோல் சரத்பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவரது உறவினரான அஜித்பவார், பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சரத்பவார் - அஜித்பவார் என இரு தலைமையில் பிளவுற்றது. இதனால் 53 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியானது, இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமைகோரி இருவர் தரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பினரிடமும் 10 முறைக்கு மேல் விசாரணை நடைபெற்றது. இதன் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவை அறிவித்தது. அதன்படி அஜித்பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனவும், அந்த அணிக்கே கட்சியின் சுவர் கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுகிறது எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. புதிய கட்சியின் பெயரை தேர்வு செய்ய காலக்கெடுவுடன் சரத்பவாருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதனை வரவேற்பதாக அஜித்பவார் அறிவித்த அதே நேரத்தில், மத்திய ஆட்சியாளர்களின் அழுத்தமே முடிவுக்கு காரணம் எனக்கூறி உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக சரத்பவார் தரப்பு அறிவித்தது. 

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து சரத்பவார் தரப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அஜித்பவார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக பிளவுறும் நேரத்தில் இம்முடிவும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow