சாலையில் இறந்தவரின் உடல் புதைப்பு-சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு
சுடுகாட்டு பகுதி அளவீடு செய்த பின்னர்தான் இதற்கான தீர்வு எட்டப்படும்
சீர்காழி அருகே சாலையில் நடுவில் இறந்தவரின் உடலை புதைத்ததோடு, மயான பகுதியில் சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அமைதிப்பேச்சு முடிவில் கையெழுத்திடவும் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கீழகரம் பகுதியில் உள்ள மயானத்தில் சாலை அமைக்கும் பணி நடந்துவரும் நிலையில் அப்பகுதியில் இறந்தவரின் உடலை மயான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலையின் நடுவே குழி தோண்டி புதைக்கப்பட்ட விவகாரம் சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்களும் மயானத்திற்குட்பட்ட பகுதியில் சாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த அமைதிப்பேச்சுவார்த்தை சீர்காழி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.டி.ஓ அர்ச்சனா தலைமையில் நடைபெற்றது. இதில் தாசில்தார் இளங்கோவன், டி.எஸ்.பி லாமேக், கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆணையர் தியாகராஜன் மற்றும் கீழகரம் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
கீழகரம் மக்கள் பேசுகையில், “நாங்கள் பல ஆண்டாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாட்டின் மீது சாலை அமைக்கக்கூடாது. அத்துடன் சுடுகாட்டுப்பகுதிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத்தரவேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தனர்.
ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயப்பிரகாஷ், “இந்த பகுதியில் ஏற்கனவே சாலை இருந்ததால்தான் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு பெற்று தற்போது புதிய சாலை அமைக்கப்படுகிறது.” என்றார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவிப்பதை கருத்தில் கொண்டு தற்காலிகமாக சாலை அமைக்கும் பணியை நிறுத்தி வைப்பது, சுடுகாட்டினை அளவீடு செய்து சுற்றுச்சுவர் அமைத்து அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.ஆனால் சுடுகாட்டினை அளவீடு செய்த பின்னரே இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து இடுவோம் என்று கூறி கீழகரம் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.சுடுகாட்டு பகுதி அளவீடு செய்த பின்னர்தான் இதற்கான தீர்வு எட்டப்படும் என்று அதிகாரிகள் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?