ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் மேலும் சிக்கல்: சென்சார் போர்டு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் தாமதம் ஆகி வருகிறது. சென்சார் போர்டு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதால் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய் நடித்த, ஜனநாயகன் படம், பொங்கலை முன்னிட்டு, ஜன., 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என, படக்குழு அறிவித்தது. படத்துக்கு சி.பி.எப்.சி., எனும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. அதனால், தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக்சன்ஸ் எல்.எல்.பி., என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை, விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் உடனே தணிக்கை சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தணிக்கை வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், தங்களின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிப்ரவரி இறுதியில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஜனநாயகம் பட வெளியாகும் வாய்ப்பு இல்லாமல் போய் விடும் என்பதால், படதயாரிப்பு நிறுவனம் உள்பட விஜய் தரப்பு மிகுந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது.
What's Your Reaction?

