பெங்களூரு ரமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. மயிலாப்பூரில் தொப்பி வாங்கிய அப்துல் மதீன் தாஹா.. தோண்டி துருவும் என்ஐஏ
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நபரை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டடம் ஒன்றிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பெங்களூருவில் உள்ள ரமேஸ்வரம் கபே ஹோட்டலில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகா, தமிழகம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் முஷம்மில் ஷெரீப்பை, முஸாவிர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மதீன் தாஹா ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் முஸாவிர் ஹூசைன் ஷாகிப் தான் ராமேஸ்வர கபேக்குள் சென்று வெடிகுண்டை வைத்து சென்றது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவருக்கு போன் மூலம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவுகளை அப்துல் மதீன் தாஹா தான் வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அப்துல் மதீன் தாஹா குறித்த முழுவிவரங்களையும் என்ஐஏ அதிகாரிகள் சேகரித்தனர். அவர் சென்னை முதல் மும்பை வரை சென்று வந்ததும் தெரிய வந்தது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன் சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தும், மயிலாப்பூர் சிட்டிச் சென்டருக்கு சென்று தொப்பி வாங்கியதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் கைதாகி இருந்த அப்துல் மதீன் தாஹாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து அவர் சென்ற பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை மற்றும் சோதனை நடத்தினர்.
இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜிற்கு அப்துல் மதின் தாஹாவை அழைத்து சென்று தான் தங்கி இருந்த அறை அடையாளம் காட்ட சொல்லியும் சில கேள்விகளை கேட்டு என்ஐஏ அதிகாரிகள் அவரை விசாரணை நடத்தி உள்ளனர். இதனை என்ஐஏ அதிகாரிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். அருகில் இருந்த பழைய கட்டிடத்திற்கு அவரை அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
சுமார் 3 மணி நேர விசாரணை நடத்தி விட்டு அப்துல் மதின் தாஹாவை என்ஐஏ அதிகாரிகள் ஆந்திராவிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற இடங்களுக்கு அழைத்து அவரை விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் நடத்த உள்ளனர். பெங்களூரு ரமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?