TVK Vijay: நாளை இரண்டாவது கட்ட கல்வி விருது விழா… மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா விஜய்?
தவெக தலைவர் விஜய் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்ட நிகழ்வு நாளை நடைபெறுகிறது.
சென்னை: கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் விஜய், அடுத்து அரசியலில் களமிறங்குகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கிய விஜய், அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதேபோல், மாணவர்களுக்கான கல்வி விருது விழாவையும் கடந்தாண்டைப் போல இந்த வருடமும் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார். அதன்படி, ஜூன் 28ம் தேதி திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற கல்வி விருது விழாவில், 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் விருதுகளும் வழங்கினார்
முதற்கட்டமாக நடைபெற்ற கல்வி விருது விழாவில், அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஊக்கத் தொகை, விருதுடன், தடபுடலான விருந்தும் கொடுத்து அசத்தினார் விஜய். அதேபோல், மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்த அவர், தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை, அரசியல் மட்டுமின்றி மற்ற துறைகளில் நல்ல தலைவர்கள் வேண்டும் என்றார். நம்மிடம் நல்ல மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் உள்ளனர். ஆனால், அரசியலையும் ஒரு கேரியராக நாம் பார்ப்பதே இல்லை என பேசியிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அரசியல் மட்டுமின்றி போதை பழக்கங்களை மாணவர்கள் கைவிட வேண்டும், போதை மருந்துகள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு தடுத்துவிட்டது எனவும் பேசியிருந்தார். தொடர்ந்து மாணவர்களின் கேரியர் பற்றியும் அட்வைஸ் கொடுத்த விஜய், இரண்டாவது கட்ட விருது விழாவில் எதுவும் பேசப் போவதில்லை என அறிவித்துவிட்டார். அவர்களுக்கும் இதே அட்வைஸ் கொடுத்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என தெரிவித்திருந்ததால், நாளைய நிகழ்வில் விஜய் பேச வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்துத் தெரிவிப்பார் எனவும், அப்போது ஏதேனும் குட்டி ஸ்டோரி சொல்ல சான்ஸ் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்விற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நிகழ்ச்சி ஆரம்பமாகும் எனவும், இதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முதல் மூன்று இடம் பிடித்த 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். அதன்படி, சுமார் 740க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் சேர்த்து மொத்தம் 3500 க்கும் அதிகமானோர் கலந்துகொள்ள உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகளை அழைத்து வர தவெக சார்பில் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?