“வெயிலுக்கு ரெஸ்ட்” 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வரும் 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

“வெயிலுக்கு ரெஸ்ட்” 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து வானிலை மையம்  வெளியிட்ட அறிக்கையில், வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில், மரத்வாடா முதல் குமரிக்கடல் வரை உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

மழைக்கு வாய்ப்பு

இதன்காரணமாக, இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

22-04-2026 முதல் 26-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

22-04-2026 முதல் 26-04-2026 வரை: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

22-04-2026 முதல் 26-04-2026 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை வானிலை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow