மூக்குத்தி அம்மன் 2 புதிய அப்டேட்....தீபாவளிக்கு சரவெடிக்க காத்திருக்கும் Rise of Mahashakthi!
சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை நயன்தாரா. தனது நடிப்பாலும், கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதிலும் காட்டும் கவனத்தாலும் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை அவரே இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பாராத திருப்பமாக இப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
டீசர் வெளியீடு
ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின் டீசரைப் படக்குழு ஏற்கெனவே வெளியிட்டது. ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ (Rise of Mahashakthi) என்ற தலைப்பில் வெளியான டீசரில் இடம்பெற்ற பிரம்மாண்டமான காட்சிகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன.
தீபாவளி வெளியீடு
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரெய்லர் வெளியீடு
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அது இணையத்திலும் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?

