அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை பார்த்த செக்யூரிட்டி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
பீகார் மாநிலம், மேற்கு சம்பரன் மாவட்டம் பகாகா பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு வேலை பார்க்கும் செக்யூரிட்டி ஒருவர், நோயாளி ஒருவருக்கு தையல் போட்டு பேண்டேஜ் போடும் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் “பகாகா மருத்துவமனைக்கு அருகே நடந்த டெம்போ, வேன் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வேனில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அப்போது, மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால், அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவர் நோயாளியின் காயத்தை தையலிட்டு பேண்டேஜ் போட்டு சிகிச்சை அளித்துள்ளார். இதனை அந்த ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் வாசிம் அக்தரும், காயமடைந்த சுரேந்திர பாசி என்பவரும் தெரிவித்தனர்.
இது குறித்து, பகாகா மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் குமார் திவாரி கூறும்போது, “இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் இல்லை. ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்கள், கட்டுப்போடும் ஊழியர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
இருக்கும் ஊழியர்களை வைத்து மருத்துவமனையை நடத்தி வருகிறோம். விபத்து நடந்த அன்று காயமடைந்தவர்கள் வந்தபோது ஒருவருக்கு அதிகமாக ரத்தப்போக்கு இருந்தது. இதையடுத்து டாக்டர் ஒருவரின் மேற்பார்வையில்தான் செக்யூரிட்டி தையல் போட்டார்” என விளக்கம் அளித்துள்ளார்.
What's Your Reaction?