மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை: மெட்ரோ நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கேள்வி
சென்னை மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி, வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மெட்ரோ ரயில் தரப்பில், ஒவ்வொரு பெட்டியிலும் மொத்தமுள்ள 50 இருக்கைகளில் 14 இருக்கைகள் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கைகளின் அருகில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என எழுதி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், தனியாக இருக்கைகள் ஒதுக்கியிருந்தாலும், அந்த இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் எவரும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வந்தால் எழுந்து இடம் வழங்குவதில்லை. அதனால், பெண்களுக்கு என தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல, மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என அவ்வப்போதைக்கு திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் எனவும், இருக்கைகள் ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாட்களில் வகுக்க வேண்டும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
What's Your Reaction?

