TN Weather: 9 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்கும்.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nov 12, 2026 - 07:38
TN Weather: 9 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்கும்.. வானிலை மையம் தகவல்!
TN Weather

தஞ்சை, திருவாரூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று (நவ.12) இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக வரும் நாளை (நவ.13) ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும்.

மிதமான மழை

இந்த நிலையில், இன்று (நவ.12) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (நவ.13): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow