TVK Vijay: “பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்..” அதிரடியாக உத்தரவு போட்ட தவெக தலைவர் விஜய்!
நடிகரும் தவெக தலைவருமான விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: கோலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய், விரைவில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், 2026 தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார். இதனிடையே தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், இம்மாதம் 22ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு கோட் படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழு ரெடியாகிவிட்டது. ஆனால், விஜய்யோ தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என கழக நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார். எனவே தலைவர் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று காலை கள்ளச் சாராயம் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டிருந்த விஜய், அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தவெக தலைவராக நடிகர் விஜய்யின் முதல் விசிட் கள்ளக்குறிச்சிக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்த விஜய், அவர்களை அரவணைத்து ஆறுதல் கூறிய வீடியோக்கள் வைரலாகின. அதனையடுத்து தற்போது தனது 50வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விவகாரத்தில், விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசை நேரடியாக அட்டாக் செய்திருந்தார். இதுவரை தவெக கட்சி சார்பில் வெளியான அறிக்கைகளில் விஜய் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். ஆனால் தற்போது அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், 2026 தேர்தலில் தவெக விஸ்வரூபம் எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கழக நிர்வாகிகளுக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க உத்தரவிட்டுள்ள விஜய், தி கோட் படத்தின் அப்டேட்களுக்கு மட்டும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இன்னொரு பக்கம் விஜய்யின் துப்பாக்கி திரைப்படம் இன்று ரீ-ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






