மீண்டும் தூசு தட்டப்பட்ட 'சண்டியர்' தலைப்பு.. சோசியல் மீடியாவில் வைரலாகும் கமல் போஸ்டர்!

கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Nov 6, 2026 - 19:06
மீண்டும் தூசு தட்டப்பட்ட 'சண்டியர்' தலைப்பு.. சோசியல் மீடியாவில் வைரலாகும் கமல் போஸ்டர்!
Sandiyar

இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடிக்கத் தொடங்கிய திரைப்படத்திற்கு முதன்முதலில் 'சண்டியர்' என்றே பெயரிடப்பட்டது. எனினும், அந்தத் தலைப்பும் படத்தின் போஸ்டர்களில் இடம்பெற்ற அரிவாள் போன்ற விளம்பரங்களும் தென் தமிழகத்தில் சாதிய மோதல்களையும் வன்முறையையும் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

சட்டம்-ஒழுங்குப் பிரச்னை காரணமாக அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அரசு படப்பிடிப்பிற்குப் பாதுகாப்பு அளிக்க மறுத்தது. பின்னர் அப்படத்தின் தலைப்பு 'விருமாண்டி' என மாற்றப்பட்டு, 2004-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனிடையே, கடந்த 2025-இல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் தலைப்புக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 'தக் லைஃப்' எனும் ஆங்கிலச் சொல்லுக்கு வன்முறையைச் சார்ந்த தவறான பொருள் இருப்பதாகக் கூறி, 'சண்டியர்' விவகாரத்தைப் போல இத்தலைப்பையும் அவர் எதிர்த்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

'விருமாண்டி' உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், கமல்ஹாசன் தற்போது மீண்டும் அதே 'சண்டியர்' என்ற தலைப்பில் நடிக்கவுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 'வீர தீர சூரன்' திரைப்படத்தை இயக்கிய எஸ்.யூ. அருண்குமார் இப்படத்தை இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமால் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே இதைத் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கமல்ஹாசன் காருக்கு வெளியே கையில் துப்பாக்கியுடனும் ரத்தக் கறைகளுடனும் வித்தியாசமான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இப்போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow