அதானி – ஜெகன் சந்திப்பு... நடுவில் முதல்வர் விஜய், திரிஷா! திருமண வீடா... அரசியல் சங்கமமா?
திருமண வீட்டுக்குப் போனால் மணமக்களைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவோ அரசியல் வட்டாரத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. காரணம், அங்கே கூடியிருந்த வி.ஐ.பி-க்களின் பட்டியல் அப்படி..
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் திருமண விழாவில் தொழிலதிபர் கௌதம் அதானி, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நடிகை திரிஷா எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அரசியல், தொழில், சினிமா என மூன்று துறைகளின் நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் சங்கமித்ததால், திருமணத்தைவிட விருந்தினர்கள் பற்றிய பேச்சுதான் அதிகமாகியிருக்கிறது.
அதானியும் ஜெகனும்... பழைய சர்ச்சை, புதிய சந்திப்பு!
அதானிக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையிலான தொடர்பு சாதாரணமானதல்ல. ஜெகன் ஆட்சிக் காலத்தில் ஆந்திராவில் அதானி குழுமத்தின் பல்வேறு தொழில் முதலீடுகள் முன்னெடுக்கப்பட்டன. கங்காவரம் துறைமுகத்தைக் கைப்பற்றியது தொடங்கி, சூரிய மின்சக்தி ஒப்பந்த விவகாரம் வரை இரு தரப்பின் பெயர்களும் பலமுறை ஒன்றாக அடிபட்டன.
குறிப்பாக, 2024-ம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை முன்வைத்த லஞ்சக் குற்றச்சாட்டுகள் பெரும் புயலைக் கிளப்பின. சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக அதானி குழுமத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் அப்போதைய ஆந்திர முதல்மைச்சர் ஜெகனுடனான சந்திப்பும் பேசப்பட்டது.
ஆனால், எங்களுக்கும் அதானிக்கும் நேரடி ஒப்பந்தமே கிடையாது. மத்திய அரசு நிறுவனமான SECI மூலமாகத்தான் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்று ஜெகன் தரப்பு விளக்கம் அளித்தது. குற்றச்சாட்டுகளையும் மறுத்தது.
இப்படி அமெரிக்கா வரை சென்ற சர்ச்சையில் பெயர் அடிபட்ட இருவரும் இப்போது ஒரே திருமண விழாவில் சந்தித்திருப்பது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய் – திரிஷா வருகை... கூடுதல் ஸ்பெஷல்!
இந்த விழாவின் இன்னொரு ஹைலைட் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் வருகை. அவருடன் நடிகை திரிஷாவும் கலந்துகொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ஒருபுறம் ஆந்திர அரசியலின் முக்கிய முகமான ஜெகன், மறுபுறம் சர்வதேச அளவில் பேசப்படும் தொழிலதிபர் அதானி. இவர்களுக்கு நடுவே தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் விஜய். சினிமா நட்சத்திரமாக வலம் வந்த திரிஷாவும் அதே விழாவில்.
மொத்தத்தில், மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழா, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் சந்திப்பு மேடையாக மாறியிருக்கிறது.
அதானி – ஜெகன் சந்திப்பு பழைய அரசியல் சர்ச்சைகளை நினைவுபடுத்த, விஜய் – திரிஷா வருகை தனி விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. திருமண வீட்டில் மங்கள இசை ஒலித்ததோ இல்லையோ... அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.
What's Your Reaction?



