"பேத்தி ஆசைப்பட்டதால் சம்மதித்தேன்.." வைதீக திருமண சர்ச்சைக்கு துரைமுருகன் விளக்கம்!

பேத்தியின் வற்புறுத்தலால் வைதீக முறையில் திருமணம் நடந்ததாகக் கூறிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அந்நிகழ்வுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

Nov 6, 2026 - 20:04
"பேத்தி ஆசைப்பட்டதால் சம்மதித்தேன்.." வைதீக திருமண சர்ச்சைக்கு துரைமுருகன் விளக்கம்!
Durai Murugan

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது பேத்தியின் திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரையின் திருமணம் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற்றது. இத்திருமணம் வைதீக முறைப்படி நடத்தப்பட்டதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இது விவாதப் பொருளானது.

இதற்கு விளக்கம் அளித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் வழியில் நீண்ட அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் எனது திருமணம் கலைஞர் தலைமையிலேயே நடைபெற்றது. அதேபோல எனது மகனின் திருமணத்தையும் கலைஞரின் தலைமையில்தான் நடத்தினேன் என்பதை நாடு நன்கு அறியும்" என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் கல்வி பயின்ற தனது பேத்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், வைதீக முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். பேத்தியின் தீவிர வற்புறுத்தல் காரணத்தினாலேயே இத்திருமண முறையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நடந்த இந்த நிகழ்விற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், குடும்பச்சூழல் காரணமாக நடைபெற்ற இந்த நிகழ்வை யாரும் அரசியலாக்கவோ அல்லது தேவையற்ற விவாதப் பொருளாக்கவோ முன்வர வேண்டாம் என்றும் தனது அறிக்கையின் வாயிலாகத் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow