Vijay: விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு வாழ்த்து... புது ரூட்டில் விஜய்யின் தவெக!

நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளுக்கு விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Jun 7, 2024 - 15:13
Vijay: விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு வாழ்த்து... புது ரூட்டில் விஜய்யின் தவெக!

சென்னை: தமிழில் மாஸ் ஹீரோவான விஜய், விரைவில் அரசியலிலும் களமிறங்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் ரெடியாகிவிட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து விலகவும் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, கோட் இல்லாமல் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். தளபதி 69 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இப்படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனிடையே ஏப்ரல் மாதம் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தல், கடந்த 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையோடு முடிவுக்கு வந்தது. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்பதோடு, வேறு கட்சிகளுக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. அதேபோல், தனது கட்சி நிர்வாகிகளுக்கு எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என விஜய் மறைமுகமாக கூட அட்வைஸ் செய்ததாக தெரியவில்லை. இன்னொரு பக்கம் விஜய்யின் அரசியல் வருகைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார் சீமான். இதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் 2026 தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுபற்றி சமீபத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த் கூட்டணி பற்றியெல்லாம் தலைவர் விஜய் தான் முடிவெடுப்பார் என உறுதியாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.19 வாக்குகளைப் பெற்றிருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 6.58% வாக்குகள் பெற்றிருந்தது. அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி, 2 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து விசிக, நாதக இரண்டும் மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளன. இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்” எனவும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு விஜய் வாழ்த்துத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 2026 தேர்தலில் இந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி சேரலாம் என விஜய் கணக்குப் போடுகிறாரா என கேள்வி எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow