மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா

நீர்வளத்தைக் கொண்டு மதிப்பிடும் பொருளாதாரம்தான் மறைநீர் ஆகும்

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா

 - மானா பாஸ்கரன்

‘நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு’ என்ற வள்ளுவன் சொல். கூடவே, 'மழை பெய்வது பொதுநலம்; குடை பிடிப்பது சுயநலம்’ என்று சொன்ன தந்தை பெரியாரின் வார்த்தைகளும் ஈரம் தெளிக்கின்றன.

சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூகச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நீர்ப்பாசனத் துறை பொறியாளர் என்கிற பன்முகத் திறன் படைத்த கோ.லீலா எழுதிய ‘மறைநீர்’ நூலில் இருந்து, இதுவரை நாம் அறிந்திராத பல அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்நூலிலிருந்து பெறும்தகவல்களை, கருத்துகளை வாசித்த பின்னர் பல்கலைக்கழகங்களில் பாடநூலாக இந்நூலை வைக்கலாம் என்று நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்.

‘தமிழ்நாட்டில், முக்கியமாகத் தலைநகர் சென்னையில், நிலவும் தண்ணீர்ப் பஞ்சம் உலகறிந்தது. ஆண்டுதோறும் மென்மேலும் தீவிரம் கொள்ளும் இப்பிரச்சினை இங்கு மட்டுமே உள்ளதல்ல. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் ஏற்கெனவே நீரில்லா நிலையை எட்டிவிட்டது. இந்த அவலத்தின் விளிம்பில், உலகின் பல்வேறு நகரங்களும். நாடுகளும் வரிசையில் நிற்கின்றன என்ற செய்திதான் இதுவரையில் பூவுலகு கேள்விப்பட்ட மிகுந்த திகிலூட்டும் செய்தியாக இருக்க முடியும்’ என்று இந்நூலின் முகவுரையில் பொறிஞர் ஐயாத்துரை சாந்தன் சொல்லியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.

வாழ்க்கையின் அமுதம்தான் நீர் என்றார் சர் சி.வி.ராமன். அது எவ்வளவு சாஸ்வதமான கூற்று என்பதை, இந்தப் புத்தகம் நமக்குச் சொல்கிறது. இப்புத்தகத்தில் கோ.லீலா அறிவியல் பார்வையோடு எழுதி யுள்ளதை  படியுங்கள்:

தண்ணீருக்கு சுவை எப்படி வருகிறது?

தண்ணீர் ஒரு இடத்தில் தேங்கும்போதுஅங்குள்ள பாறை (அ) மண் மீது உள்ள கனிமங்கள் கரையும்போது (அ) தேங்கும் நீரில் அமிலத் தன்மையும் காரத்தன்மையும் இருந்தால், அவற்றுடன் கனிமங்கள் வினைபுரிந்து தண்ணீருக்கு சில சுவைகளைத் தருகிறது.

உதாரணமாக  சிறுவாணி, தாமிரபரணி, காவிரி ஆறுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை உண்டுதானே. அதுபோலவே, மூலிகைகளைக் கடந்து வரும்போது அதன் சுவையும் அதன் மருத்துவத் தன்மையையும் தண்ணீர் பெற்றுக்கொள்கிறது. சில கிணறுகளில் உள்ள தண்ணீர் இளநீரைப் போல் உள்ளது என்று சொல்வதற்கும், சில கிணறுகளில் உள்ள தண்ணீர் உப்பு சுவையோடும் இருப்பதற்கும் காரணம்… நிரந்தரத் தன்மையுள்ள சில கனிமங்கள் அந்தக் கிணறுகளில் இருப்பதுதான்.

மறைநீர் (Virtual Water) என்றால் என்ன?

நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் நீர்தான் ‘மறைநீர்’ எனப்படும். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியையும் பணத்தைக் கொண்டு. மதிப்பிடுவதைப் போல்… நீர்வளத்தைக் கொண்டு மதிப்பிடும் பொருளாதாரம்தான் மறைநீர் ஆகும்.

மறைநீர் என்பது ஒருவகைப் பொருளாதாரம். மறைநீர் என்பது ஒரு தத்துவம். மறைநீர் என்பது காற்றைப் போன்றது. ஜான் அந்தோனி ஆயன் என்கிற இங்கிலாந்து பொருளாதார வல்லுநர்தான் இதைக் கண்டுபிடித்தார்.

மறைநீர் தத்துவப்படி ஒரு டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்குச் சமம். எப்படியென்றால் - கோதுமையை விளைவிக்க தண் ணீர் தேவை. கோதுமை விளைந்தவுடன் அதில் அந்தத் தண்ணீர் இருக்காது. எங்கே போனது அந்த நீர்? கோதுமையை விளைவிக்க செலவிடப்பட்ட நீர் கோதுமைக்குள்தானே மறைந்திருக்க வேண்டும். அதுதான் மறைநீர்.

ஒரு கிலோ அரிசியை உற்பத்திசெய்ய 2,500 முதல் 3 ஆயிரம் லிட்டர் வரை நீர் மறைமுகமாகத் தேவைப்படும். 11 டன் எடை கொண்ட இலகுரக வாகனத்தை உற்பத்திசெய்ய 4 லட்சம் லிட்டர் நீரும்; ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் நீரும் தேவைப்படுகிறது.

காலையில் ஒருவர் அருந்தும் ஒரு கோப்பை காபியில் 140 லிட்டர் அளவுக்கு மறைநீர் உள்ளது. அதாவது, ஒரு காபி செடியைப் பயிர் செய்து, கொட்டையை அறுவடைசெய்து, அதைத் தூளாக்கி, கப்பலில் ஏற்றுமதி செய்யும் அந்நாட்டின் நீரும் அதில் மறைந்துள்ளது. இப்படி கணக்கிடும்போதுதான் ஒரு கோப்பை காபியில் மறைந்திருக்கும் மறைநீரின் அளவு 140 லிட்டர் எனத் தெரியவருகிறது.

தண்ணீர் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட (Finite Resources) வளம். விற்ப னைக்கு உரிய பொருள் அல்ல. மனிதர்களால் தயாரிக்க முடியாத ஒன்றை விற்க, மனிதர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

நீர்த்தடம் (Water Footprint) என்பது நீர் ஓடும் தடமான ஆறு, அருவி போன் றவை இல்லை. நீர்த்தடம் என்பது மனிதனால் நேரடியாகப் பயன்படுத்தப்படும் நீர் + மறைநீர் பயன்பாடு ஆகும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் நீர்த்தடம் எவ்வளவு எனக் கணக்கிடப்படுகிறது. நீர்த்தடம் லிட்டரால் அளவீடு செய்யப்படும். இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு ஒரு தனிநபரால் நுகரப்படும் தண்ணீரின் அளவு 980 க்யூபிக் மீட்டர் ஆகும். அதாவது 9,80,000 லிட்டர் (ஒரு க்யூபிக் மீட்டர் என்பது 1,000 லிட்டர்).

தண்ணீருக்கான முதல் போர் எங்கு நடந்தது?

3ம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. தண்ணீர் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட (Finite Resources) வளம். விற்பனைக்கு உரிய பொருள் அல்ல. மனிதர்களால் தயாரிக்க முடியாத ஒன்றை விற்க, மனிதர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதேபோல் தண்ணீர் பல்லுயிர்களுக்கும் உரிய வளமும் ஆகும். ஆனால், தண்ணீர் மனிதனுக்கு மட்டுமே உரிய பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் விளைவுதான் தண்ணீருக்கான முதல் போர்.

1997-ம் ஆண்டு பொலிவியா வுக்கு உலக வங்கி 2.5கோடி டா லர் கடன் கொடுத்தது. அதற்கு மாறாக, தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. அதைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டு அமெரிக்கா வின் ‘பெக்டல்' என்ற நிறுவனம் தண்ணீரைத் தனியார்மயமாக்கி, 40ஆண்டுகாலத்துக்கு ஓர் ஒப்பந்தத்தைப் போடுகிறது. ஒப்பந்தம் செய்த முதல் ஒரு மாதத்தில் எந்தப் பிரச்சினையும் வரவில்லை. 2-வது மாதத்தில் இருந்து ஆரம்பமானது தொல்லை. பெக்டெல் நிறுவனம் தண்ணீரின் விலையைத் தாறுமாறாக ஏற்றிவிடுகிறது. அதிர்ச்சியின் எல்லையில் திகைத்து நின்றனர் மக்கள்.

சம்பளத்தில் 3-ல் ஒரு பங்கைத் தண்ணீருக்கே செல வழிக்க வேண்டியிருந்தது. மக்கள் கிணற்றில் இருந்தும் ஆற்றில் இருந்தும் தண்ணீர் எடுத்துச் சென்றனர். ‘பெக்டெல்’ நிறுவனம் அதற்கும் கட்டணம் வசூலித்தது. மக்கள் மழைநீரைச் சேகரிக்கத் திட்டமிட்டு, மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை நிறுவினர், அதையும் பெக்டெல் நிறுவனம் உடைத்தெறிந்தது. தண்ணீரின் விலையேற்றத்தைக் கண்டித்த விக்டர் ஹியூகோ டாஜா என்ற சிறுவனை முகத்தில் சுட்டனர். இது நடந்தது 2000-ம் ஆண்டு. மக்கள் பெக் டெல் நிறுவனத்து க்கு எதிராகக் கிளர்ந் தெழுந்தனர். பணம்கட்ட முடியாதவர்களின் தண்ணீர் இணைப்பைத் துண்டித்தது பெர்டெல் நிறுவனம். பூமிக்குக்கீழே உள்ள தண்ணீர், வானில் இருந்து வரும் தண்ணீர்… அனைத்தும் தனக்கே சொந்தம் என இறுமாப்பில் எக்காளமிட்டது அந்நிறுவனம். மக்களுடைய தொடர் போராட்டத்தை அடுத்து, 2000-ம் ஆண்டு பொலிவியா அரசா ங்கம் பெக்டெல் நிறுவனத்தைத் தண்ணீர் வழங்கும் உரிமத்தை விலக்கிக்கொள்ள கட்டாயப்படுத்தியது. 2001-ம் ஆண்டு, உலக வங்கி யிடம் பொலிவியா முறையிட்டது.

பொலிவிய அரசு மற்றும் மக்களின் தீவிர எதிர்ப்பைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டுவாக்கில் பெக்டெல் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை விலக்கிக் கொண்டது. தண்ணீர் தனியார்மயமானதை எதிர்த்து நடந்த முதல் தண்ணீர்ப் போர் இதுதான். தண்ணீருக்காக நடைபெற்ற இந்த முதல் தண்ணீர்ப் போரை மையமாக வைத்து, 2010-ல் Even The Rain என்கிற அற்புதமான சூழலியல் திரைப்படம்கூட வந்துள்ளது.

மழையை நம் முன்னோர்கள் என்னென்ன பெயர்களில் அழைத்துள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளுங்களேன்..

துளி, திவலை, தூவல், சீகரம், தூறல், மாரி, வருடம், உறை, ஆலி, வானம் எனும் பெயர்களில் மழை அழைக்கப்பட்டிருகிறது. பெருமழையை ஆசாரம் என்றும்; விடா மழையை பளித்தல், சோனை என்றும்; மழைத் துளியை- திவலை, தூவல், சீகரம், கேரம், ஆலி, தளி, உறை என் றும்; ஆலங்கட்டி மழையை- கரகம், சுனோபலம் என்றும்; இடியை- வெடி, ஒலி, அசனி, செல், விண்ணேறு, மடங்கல், உரும், அளவேறு என்றும்; மின்னலை- வித்துத்து, தடித்து, சம்பை, சபலை, கனருசி என்றும்; பனியை- இமம், துகினம் என்றும்; வானவில்லை- இந்திர தனு என்றும்; மேகத்தை- மங்குல், சீதம், பயோதரம், தாராதரம், குயின், எழிலி, மஞ்சு, கொண்டல் என்றும் பெயரிட்டு தமிழர்கள் அழைத்துள்ளனர்.

10 ஹெக்டேர் பரப்பளவு உள்ள வனம் அழிந்தால் 1,500 வகைப் பூக்களும் செடி - கொடிகளும், 700 வகையான மரங்களும், 60 வகையான நீர் நில வாழ்விகளும் அழிந்து போய்விடும். ஒரு காட்டு மரம் 400 வகையான பூச்சிகளுக்கு வாழ்விடமாக இருக்கிறது என்பதையும் கோ.லீலா எழுதியிருக்கும் இந்த ‘மறைநீர்’ புத்தகத்தின் வழியாகத் தெரிந்துகொண்டபோது… இயற்கையை இன்னும் இன்னும் நேசிக்கத் தோன்றுகிறது. இவை மட்டுமல்ல… தண்ணீரைப் பற்றி சுவைமிகுந்த செய்திகள் இன்னும் இன்னும் இப்புத்தகத்தில் உள்ளன. அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.




What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow