காங்கிரஸ் கண்மூடித்தனமாக நம்பும் நேரு, இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் - பிரதமர் விமர்சனம்

காங்கிரஸ் கண்மூடித்தனமாக நம்பும் முன்னாள் பிரதமர் நேரு, இடஒதுக்கீட்டுக்கு எதிராக முதலமைச்சர்களிடம் வலியுறுத்தியதாக அவர் எழுதிய கடிதத்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாசித்துக் காட்டி கடுமையாக விமர்சித்தார்.

Feb 7, 2024 - 15:49
Feb 7, 2024 - 16:11
காங்கிரஸ் கண்மூடித்தனமாக நம்பும் நேரு, இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் - பிரதமர் விமர்சனம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது குடியரசுத்தலைவரின் உரை வரலாற்றுச்சிறப்பு மிக்கது எனக்கூறி, அவர் உரையைத் தொடங்கினார். நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நன்றி எனக்கூறிய அவர், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சு சிறந்த பொழுதுபோக்காக அமைந்ததாகக் கூறினார்.

வரும் தேர்தலில் 400 இடங்களில் பாஜகவின் NDA கூட்டணி வெற்றிபெற கார்கே ஆசி வழங்கியுள்ளதாகவும் 40 இடங்களையாவது காங்கிரஸ் கைப்பற்ற பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ், தற்போது இப்படி ஆகி விட்டதாகவும் அவர் பேசினார். தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கூச்சலிட்ட நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தனது உரையை வழங்கினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்ததாகவும் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும் அவர் கூறினார்.

திறமையின்மை, தரமற்ற நிலை உள்ளிட்டற்றுக்கே இடஒதுக்கீடு வழிவகுக்கும் என அப்போதைய முதலமைச்சர்களுக்கு மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தை மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி வாசித்துக் காட்டினார். இவ்வாறாக இடஒதுக்கீட்டை எதிர்த்த காங்கிரஸ், தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிராக செயல்படுவதோடு அவர்களுக்கான பங்களிப்பை மறுப்பதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை புறந்தள்ளி, அதிகாரத்துக்காக ஜனநாயகத்தின் கழுத்தை காங்கிரஸ் கட்சி நெறித்ததாகவும் அக்கட்சியின் சிந்தனைகள் எப்போதோ காலாவதியாகி விட்டது எனவும் கூறினார். நாட்டைப் பிரிக்கவே காங்கிரஸ் கதைகளை உருவாக்குகிறது என விமர்சித்த பிரதமர் மோடி, தேசத்தின் பெரும்பகுதி நிலங்களை எதிரிகளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தற்போது உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து உபதேசம் செய்வதாகவும் கடுமையாக சாடினார். ஆங்கிலேயர்களால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, பல தசாப்தங்களாக அடிமைத்தனத்தின் அடையாளமாக திகழ்வதாகவும் அவர் கூறினார்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்று அழித்ததாகக் கூறும் காங்கிரஸ், BSNL HAL லேன் அழிந்தது எவ்வாறு என்பதை நினைவுகூற வேண்டும் எனவும் பிரதமர் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் அழித்த BSNL தற்போது 5G-ஐ நோக்கி நகர்வதாகவும் ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையாக இந்தியா திகழ்வதாகவும் அவர் கூறினார். மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடிப்பது வெகு தொலைவில் இல்லை எனக் கூறிய பிரதமர், மோடி 3.o என தற்போதே பலர் பேசத் தொடங்கி விட்டனர் எனவும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow