அமலாக்கத்துறையால் என்ன செய்ய முடியும்? - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விட்ட சவால்

அண்ணாமலை இங்கு போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது.

Feb 17, 2024 - 10:31
Feb 17, 2024 - 13:03
அமலாக்கத்துறையால் என்ன செய்ய முடியும்? - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விட்ட சவால்

தூத்துக்குடி மக்களவைத்தொகுதியில் கனிமொழியை எதிர்த்து அண்ணாமலை போட்டியிட்டால், டெபாசிட் கூட கிடைக்காது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாநில உரிமையை மீட்டெடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தேர்தல் பொதுக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவைத்தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடத் தயாரா? எனச்  சவால் விடுத்தார். தைரியம், திராணி இருந்தால் போட்டியிட்டுப் பாருங்கள்.மேலும் அண்ணாமலை இங்குப் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. அப்படி அண்ணாமலை வெற்றிபெற்றால் நாங்கள் அரசியலை விட்டே செல்கிறோம். மேலும், எனது சவாலை அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? எனக் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் அண்ணாமலை இல்லை என்ற நிலையை உருவாக்கும் முயற்சியை திமுகவினர் செய்வார்கள். மக்களவையில் இந்தியில் பேசச்சொன்னபோது தமிழில்தான் பேசுவேன் எனக் கனிமொழி தைரியமாகப் பேசினார்.

மேலும் பாஜக அரசு தமிழக அமைச்சர்களை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைக்கு அனுப்பி அச்சுறுத்த பார்க்கிறது.ஆனால் திமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. என் மீதும் அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.ஆகையால் களத்தில் தேர்தலைச் சந்திப்போம். மேலும் திமுகவுக்கு எதிரிகளாக நிற்கக்கூடிய அதிமுக, பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow