ஆன்மீக சுற்றுலா கிளம்பிய அரசியல் தலைவர்கள்.. பழனிக்கு போன அண்ணாமலை.. வல்லக்கோட்டையில் சரத்குமார் தரிசனம்
மக்களவை தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி ரிசல்ட்டுக்காக தமிழ்நாடு மக்கள் காத்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் ஆன்மீக சுற்றுலா கிளம்பி விட்டனர்.
தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவினாலும் திமுக, அதிமுக இடையேதான் போட்டி என்ற கருத்து நிலவி வருகிறது. சில தொகுதிகளில் பாஜக முந்தும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி முடிந்த பின்னர் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் நான்கடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு ரிசல்ட் வெளியாக உள்ளது. அதுவரை அரசியல்வாதிகளுக்கு பக் பக் மனநிலைதான். சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக கொஞ்சம் சில் பண்ணலாம் என்று குளு குளு பிரதேசங்களுக்கு சென்று விட்டனர். குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றுள்ள அண்ணாமலை அங்குள்ள ஆலயங்களையும் தரிசனம் செய்து வருகிறார்.
பூம்பாறை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்ட அண்ணாமலை, பழனி சென்று தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த இரண்டு கோவில்களில் உள்ள மூலவர்களும் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டவர்கள். எனவேதான் இந்த ஆலயங்களில் வழிபட்டால் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தனது வெற்றிக்காக இரண்டு முருகப்பெருமானையும் வழிபட்டுள்ளார்.
அதே போல சமீபத்தில் பாஜகவில் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழிபட்டுள்ளார். இங்கு தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்தின் மலர்களைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால நூல்கள் சிறப்பாக தெரிவிக்கின்றன. இது சித்திரை மாதம் மட்டுமே மலரும் தன்மையுடையது.
இந்த மரத்தின் அருகில் புராண காலத்தில் முருகப்பெருமான் பகீரத மன்னனுக்கு காட்சியருளி அவனுக்கு மீண்டும் அரசாட்சியை வழங்கியதாக இத்திருக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அதனால் இங்கு வந்து வணங்குவோருக்கு உயர்ந்த பதவிகள், வளமான செல்வங்கள், சொந்த வீடு ஆகியன கிடைப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்த திருக்கோயிலுக்கு செவ்வாய் வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
மேலும் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் வந்து வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டு புகழடைகின்றனர்.
ஞாயிறு விடுமுறை நாளையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே திருக்கோயிலுக்கு வந்து வரிசையில் நின்று வழிபட்டனர். காலை 6 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு பலவித மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விடுமுறை நாளையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர்.
நடிகர் சரத்குமார் வருகைதந்து முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கினார். முருகப்பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு தரிசித்தார். பின்னர் ஒவ்வொரு சந்நிதியாக சென்று வணங்கினார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், வஸ்திரம், மாலைகள், முருகன் படம் ஆகியன வழங்கப்பட்டன.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் அண்ணாமலை முருகப்பெருமானை வழிபட்ட நிலையில், தனது மனைவி ராதிகாவின் வெற்றிக்காக முருகனை வேண்டிக்கொண்டு வந்துள்ளார் சரத்குமார்.
What's Your Reaction?