ஆனந்தை ஓவர்டேக் செய்த ஆதவ்..? இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் விஜயை ‘Brainwash’ செய்தாரா?

மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர்கள் தேர்வு பின்னணியில் நடந்ததாக சொல்லப்படும் அரசியல் காய் நகர்த்தல்கள்தான் இப்போது ஹாட் டாபிக்!

Sep 23, 2026 - 11:45
ஆனந்தை ஓவர்டேக் செய்த ஆதவ்..? இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் விஜயை ‘Brainwash’ செய்தாரா?

‘கான்ஃபிடெண்டாக இருங்க..!’ — 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் விஜய் அதிகம் உச்சரித்த வார்த்தைகளில் இதுவும் ஒன்று. ஆனால், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் களம், அந்த அளவுக்கு ‘கான்ஃபிடெண்ட்’ ஆக இல்லையோ என்ற பேச்சு தவெக வட்டாரத்தில் எழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாகவே தற்போது இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

ஆனால், ‘அதே வேட்பாளர்களுக்கே மீண்டும் சீட்டா?’ என்பதுதான் தவெக வட்டாரத்தில் ஆரம்பத்தில் எழுந்த முக்கிய கேள்வியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கட்சியின் உள்விவகாரங்களை கவனித்து வரும் அரசியல் பார்வையாளர் ஒருவர் கூறுகையில், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தபோது, அவர்களுக்கு கட்சியில் உரிய மரியாதையும் பதவியும் வழங்கப்படும், ஆனால் இடைத்தேர்தலில் வேறு வேட்பாளர்களை களமிறக்கலாம் என புஸ்ஸி ஆனந்த் தரப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, ‘கட்சிக்கு வந்தது வேறு... இடைத்தேர்தலில் சீட் கொடுப்பது வேறு!’ என்ற கணக்கில் ஆரம்பகட்ட ஆலோசனைகள் இருந்ததாக அந்த அரசியல் பார்வையாளர் தெரிவிக்கிறார். ஆனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கணக்கு மாறியதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விஜயிடம் பேசியபோது, அதிமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக அந்த வட்டாரத் தகவல் கூறுகிறது.

‘நம்மை நம்பி பதவியை விட்டுவிட்டு வந்தவர்களுக்கே சீட் கொடுக்கவில்லை என்றால், அது கட்சியின் நம்பகத்தன்மையை பாதிக்கும். விஜய் என்ற உங்கள் முகம் இருக்கும்போது யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறலாம்’ என்ற வகையில் ஆதவ் அர்ஜுனா கூறியதாகவும் தகவல் கசிகிறது.

இதையடுத்துதான், ஆரம்பத்தில் வேறு வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவருக்குமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால், ‘ஆதவ் அர்ஜுனா சொன்ன கணக்கா? புஸ்ஸி ஆனந்த் சொன்ன கணக்கா?’ என்ற கேள்வி தவெக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஒருபக்கம் கட்சிக்கு வந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதன் மூலம், ‘வந்தவர்களை கைவிட மாட்டோம்’ என்ற அரசியல் மெசேஜை தவெக கொடுக்கிறது.

மறுபக்கம், அதே முடிவு தொகுதிக்குள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதுதான் தற்போது தேர்தல் களத்தில் எழுந்திருக்கும் முக்கிய கேள்வியாக உள்ளது.

விஜயின் முகம் போதும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா? அல்லது வேட்பாளர் தேர்வே தவெகவுக்கு எதிர்பாராத சிக்கலைக் கொண்டு வந்துவிடுமா? அக்டோபர் 6-ம் தேதி நடக்கவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் இதற்கு விடை சொல்லும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow