விளம்பரம் தேடுகிறாரா ஜோதிமணி? இல்ல.. குடைச்சல் தருகிறதா கரூர் மாவட்ட நிர்வாகம்?
”கரூர் மாவட்ட நிர்வாகம் நான் ஒதுக்கும் நிதியினை நலத்திட்டப் பணிகளுக்கு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகிறது. என்னை பணி செய்யவிடாமல் முடக்குகிறார்கள்” என கரூர் எம்பி ஜோதிமணி மாவட்ட நிர்வாகம் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.

தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்காக நான் ஒதுக்கும் நிதியை கரூர் மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்புகிறது. இது கிரிமினல் குற்றம். நிச்சயம் சும்மா விடமாட்டேன். பாராளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்னையாகக் கொண்டுவருவேன்" என கரூர் எம்.பி ஜோதிமணி கொந்தளித்திருப்பதுதான் கரூர் அரசியல் வட்டாரத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு.
இதுபற்றி கரூர் எம்பி ஜோதிமணியிடம் பேசினோம். "மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் தொகுதி வளர்ச்சிக்குத் தேவையான பணிகளையும் செய்வதற்கான எம்.பி நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாத அசாதாரண நிலை கரூரில் நிலவுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரூர் மாவட்டத்திற்கும், கரூர் மாநகராட்சிக்கும் ஒதுக்கப்பட்ட எம்.பி நிதியிலிருந்து ஒரு பைசாகூட செலவழிக்கப்படவில்லை. இது கிரிமினல் குற்றம். ஏராளமான நலத்திட்டங்கள் கிடப்பில் இருக்கும் நிலையில் அதற்காக ஒதுக்கப்படும் நிதியை செலவழிக்காமல் சப்பைக் காரணங்கள் சொல்லி திருப்பி அனுப்புவது அரசியல் சாசனத்தை மீறும் செயல்.
அதைப்போல, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டங்களில் நடக்கும் முதல்வர், துணை முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்டங்கள் விழா என எந்த அரசு நிகழ்ச்சிகளுக்கும் எனக்கு அழைப்பிதழ் அனுப்புவதில்லை. விழா கல்வெட்டுகளிலும் எனது பெயரைத் தவிர்க்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறார்கள்.
மத்திய அரசின் வரையறை முறைப்படி, ஒரு எம்.பி என்பவர் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கும் மேலானவர். ஆனால், அது இங்கு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மாநில உரிமைக்காக மத்திய அரசை எதிர்த்து போராடும்போது மாநில அரசுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். ஆனால் எனக்கு மாநில அரசு துணை நிற்கவில்லை. எம்பி நிதியை மாவட்ட நிர்வாகம் முறையாகக் கையாளவில்லை என்பதை மாநில அரசுக்குத் தெரியப்படுத்தியும் அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
ஒரு எம்.பி தனது பணியை செய்ய முடியாமல் முடக்கப்படும்போது, அதுபற்றி மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால் தவித்து விடப்பட்டதுபோல் உணர்கிறேன். எம்பி நிதி என்பது மக்களின் வரிப்பணம். அந்தப் பணம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும். அதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இனிமேலும் கரூர் எம்.பி தொகுதியில் இது தொடர்ந்தால், நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்' என்று எச்சரித்தார்.
விளம்பரம் செய்யும் ஜோதிமணி:
இதுபற்றி கரூர் மாநகராட்சி திமுக மூத்த கவுன்சிலர் நம்மிடம் கூறுகையில், ”வேண்டுமென்றே பிரச்னையை ஏற்படுத்தி, நானும் அரசியலில் இருக்கிறேன் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதில் ஜோதிமணிக்கு நிகர் யாரும் இருக்க முடியாது. மாநகராட்சிப் பகுதியில் 100 கோடி ரூபாய்க்கு பல திட்டப் பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஜோதிமணி, தனக்குத் தேவையான, தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் பயன்பெறும் வகையில் மட்டுமே நிதியை ஒதுக்குவார். அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று மாவட்ட ஆட்சியர் அதை நிராகரிக்கும்போது உடனே, 'என்னுடைய நிதியை வாங்க மறுக்கிறீர்களா? நான் யாருன்னு தெரியுமா' என்று குதிப்பார். அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை என்பதெல்லாம் தவறு. கடந்த வாரம் கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த பஸ் ஸ்டாண்ட் துவக்க விழாவில் ஜோதிமணியும் கலந்துகொண்டு பேசினார்.
அரசு விழாவில் யாராக இருந்தாலும் உறவு முறையைக் குறிப்பிடாமல் பேச வேண்டும் என்பது மரபு. தனது தந்தையான ஸ்டாலினையே அரசு விழாக்களில் முதல்வர் என்றுதான் அழைப்பார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் ஜோதிமணி மட்டும் அரசு விழாக்களில் தன்னுடைய உறவினர்களை முறை சொல்லி அழைப்பார். அந்த பஸ் ஸ்டாண்ட் விழாவில் கூட தொழிலதிபர் நாச்சிமுத்துவை, 'மாமா நாச்சிமுத்து, மாமா நாச்சிமுத்து என்று பலமுறை உறவு சொல்லி அழைக்கிறார். இதைப் பார்த்த அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் முகம் சுளித்தார்கள். நிலைமை இப்படியிருக்க அரசு விழாக்களுக்கு எனக்கு அழைப்பில்லை
என்று ஜோதிமணி சொல்வது தவறு” என்று முடித்துக்கொண்டார்.
ஜோதிமணி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கிறோம்:
இதுபற்றி, கரூர் கலெக்டர் தங்கவேலுவிடம் விளக்கம் கேட்க முயற்சித்தோம். பலமுறை தொடர்பு கொண்டும் வாட்ஸ் ஆப்பில் குறுந்தகவல் அனுப்பியும், அவரது உதவியாளர் மூலம் அணுகியும் அவரது விளக்கத்தைப் பெற முடியவில்லை. கலெக்டர் சார்பாக நம்மிடம் பேசிய ஒரு உயர் அதிகாரி "ஜோதிமணி விளம்பரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்காக வாங்கப்படும் உபகரணங்களை, நான் சொல்லும் நிறுவனத்தில் மட்டுமே வாங்கவேண்டும் என்று அப்போதைய கரூர் கலெக்டர் பிரபு சங்கரை நிர்பந்தித்தார். அவர் 'முடியாது' என்று மறுத்ததால், ஒரு நாள் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தில் தூங்கும் போராட்டத்தை நடத்தினார். இரவு முழுவதும் கலெக்டர் அலுவலகத்தில் தூங்கி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தினார்.
அதனால்தான் ஜோதிமணி விஷயத்தில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். அந்த நிதியை ரத்து செய்வார். இவர் அரசியல் செய்வதற்கு நாங்கள் ஊறுகாயாக முடியாது" என்று முடித்துக் கொண்டார்.
இதுபற்றி அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் மகேஷிடம் கேட்டோம். "ஜோதிமணிக்கு, ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவது, 'ஏற்றிவிட்ட ஏணியை மறப்பது. அரசியலுக்காக யார்மீதும் அவதூறு சொல்வது இதெல்லாம் கைவந்த கலை. எங்க தாத்தா காலத்திலிருந்து காங்கிரஸில் இருக்கிறோம் அப்போதெல்லாம் மரியாதையாக இருந்தோம். இந்த ஜோதிமணி காலத்தில் காங்கிரஸில் இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறோம். திமுக கூட்டணியில் வெற்றி பெற்று எம்பி ஆன ஜோதிமணி அதே திமுக ஆட்சியில், கலெக்டர் ஆபீஸுக்குள்ளேயே பேசித் தீர்க்க வேண்டியப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரும் அளவிற்கு பேசுகிறார் என்றால் இவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்" என்றார்.
(கட்டுரையாளர்: அரவிந்த்/ குமுதம் ரிப்போர்ட்டர் / 05.08.2025)
What's Your Reaction?






