சென்னையில் மருத்துவர் மீது தாக்குதல் - எல்.முருகன், அண்ணாமலை கண்டனம்
தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், இது போலி திராவிட மாடல் ஆட்சி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
சென்னையில் அரசு மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவத்திற்கு மத்திய இனையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்னாமலை, தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி இன்று பெங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் சங்கள் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, மருத்துவமனைக்கு வந்த ஒரு இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து இருப்பதாகவும் மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருக்கிறார். அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாததை காட்டுகிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கோபமடையும் சூழல் தமிழகத்தில் உருவாகி வருவதை இந்த சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால், டார்ச் லைட் மற்றும் மொபைல் போன் வெளிச்சத்தில் 3 வயது குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.திமுக ஆட்சியில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் எந்த அவலத்தில் இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. நிர்வாகத் திறனின்றி வெற்று விளம்பரத்திலேயே இந்த அரசு கவனம் செலுத்துகிறது.
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், உலகில் எங்கும் இல்லாத ஆட்சி நடைபெறுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுய தம்பட்டம் அடிக்கிறார். ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன? தமிழகத்தில் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவுகிறது. தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், இது போலி திராவிட மாடல் ஆட்சி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. வெற்று வாய்ப்பந்தல் போடுவதை நிறுத்திவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிர்வாகத்திலும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்
அரசு மருத்துவரைத் தாக்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை தங்கு தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் “ என தெரிவித்துள்ளார். இதேப்போல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?