காவி நிறத்தில் தூர்தர்ஷன் இலச்சினை.. தியாகத்தின் வண்ணம் காவி.. முதலமைச்சரின் கருத்துக்கு தமிழிசை பதிலடி

Apr 22, 2024 - 06:56
காவி நிறத்தில் தூர்தர்ஷன் இலச்சினை.. தியாகத்தின் வண்ணம் காவி.. முதலமைச்சரின் கருத்துக்கு தமிழிசை பதிலடி

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்துக்கு மாற்றியது குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு, உங்கள் குடும்பத் தொலைக்காட்சிக்கு வைக்கப்பட்ட ஆங்கிலப் பெயரை எப்போது தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலின் இலச்சினையை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வள்ளுவருக்கு காவி சாயம் பூசினார்கள். தமிழ்நாட்டு ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றினார்கள். அடுத்து வானொலி என்ற தமிழ்ப்பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருத பெயருக்கு மாற்றினார்கள். பொதிகை என்ற அழகிய தமிழ்ச்சொல்லையும் நீக்கியவர்கள், தற்போது அதன் இலச்சினையிலும் காவி வண்ணம் அடித்திருக்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தின் போது நாம் சொன்னது போலவே அனைத்தையும் காவி மயமாக்கும் பாஜகவின் சதித்திட்டத்திற்கான முன்னோட்டம் தான் இது. இந்த ஒற்றைவாத பாசிசத்திற்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதை 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் " என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சரின் கருத்துக்கு, பதிலளித்துள்ள தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டுள்ளார். ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது. உங்கள் குடும்பத் தொலைக்காட்சிக்கு வைக்கப்பட்ட ஆங்கிலப் பெயரை, எப்போது தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்?

DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள். காவி என்பது தியாகத்தின் வண்ணம். நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி. அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே?" என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow