மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். பேச்சுவார்த்தை முடிந்து சங்க பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், மருத்துவ சங்கங்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவி அனுமதிக்கப்பட்ட மருத்துவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த மருத்துவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வைகைச்செல்வன் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவர் மீதான தாக்குதல் எதிரொலியாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி விக்னேஷ் உடன் வேறு யாரேனும் வந்தார்களா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அரசு மருத்துவர்கள் சேவை நோக்கில் பணியாற்றி வருகின்றார்கள்.
குறிப்பாக தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். போலியான குறைபாடு காரணத்தை கூறி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவர் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அதேப்போல் சென்னை கிண்டி பன்நோக்கு அரசு மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். பேச்சுவார்த்தை முடிந்து சங்க பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், மருத்துவ சங்கங்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை”
என தெரிவித்தார்.
What's Your Reaction?